மட்டக்களப்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் சார்பாகவே அரசியலுக்கு வந்துள்ளேன். மா.உதயகுமார்.

(மட்டுமாறன்)
எங்களை பொறுத்த வரையிலே அரசியலை நாம் தவிர்ப்போமானால் எம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும் என்ற பிளாட்டோ அவர்களின் கொள்கைக்கு அமைவாக இந்த தேர்தலிலே களமிறங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது  என தமிழ்தேசியகூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற தேர்தல்பிரச்சாரகூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்

என்னுடைய 32 வருடமான அரசாங்க சேவையிலே எவ்விதமான ஊழல் அல்லது குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்படாமல் என்னுடைய சேவையை நான் செய்த போது மூன்றாம் நிலை அரசியல் வாதிகள் மட்டக்களப்பிலே இருந்து கொண்டு எங்ளுடைய அரசாங்க உத்தியோகத்தர்களை பந்தாடி அவர்களுடைய உரிமைகளிலே கைவைக்கின்ற நிலையை ஏற்றுக் கொள்ளாத வகையிலே கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி என்னுடைய ஓய்வினை முன்கூட்டியே அறிவித்து ஓய்வு பெற்றேன்.
பின்னர் என்னுடைய ஆதரவாளர்கள் பிரதேச மக்கள் என்னை அரசியலிலே ஈடுபடுமாறு கூறிய போது பல்வேறு அரசியல் கட்சிகளும் அழைத்தன இருந்தாலும் கடந்த காலங்களில் மக்களுடன் இருந்தவன் மக்களுடைய உணர்வுகளை உணர்ந்தவன் என்ற வகையில் அன்மைக்காலமாக எங்களுடைய தமிழ் இனத்துக்கும் தமிழர்களுக்கும் எங்களுடைய நிலத்துக்கும் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையை கருத்தில் கொண்டு எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக அவர்களுடைய பிண்ணணியில் இருந்து கொண்டு இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
அரசாங்க ஆணையினை ஏற்று செயற்பட்டு மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை செய்து கொண்டிருந்தேன். இப்போது மக்கள் ஆணைக்காக காத்திருக்கிறேன் மக்கள் ஆணையிட்டால் மக்களுடைய ஆணையின்படி அவர்களுடைய தேவையினை நிறைவேற்ற தயாராக இருக்கின்றேன்.
‘உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு’ இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வதாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் ஆகவே இந்த அபிவிருத்தி என்ற மாயையிலிருந்து மக்களை மக்களுடைய தன்மானத்தை காக்க கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிண்னணியிலே இருந்து கொண்டு அவர்களுடைய அபிவிருத்தியை சமாந்தரமாக கொண்டு செல்வதற்கு தான் நான் முனைகின்றேன்.
அரசியலுக்கு நான் வந்திருப்பது இந்த மாவட்டத்திலே இருக்கின்ற  60 வீதத்திற்கும் குறைவாக வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற மக்கள் சார்பாக அரசியல் செய்வதற்காக அதே போல இந்த பிரதேசத்திலே வாழ்கின்ற 40000 ற்கும் மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுடைய தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு அரசியல் செய்வதற்காக அதே போல 7000 ற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளின் தேவையை நிறைவேற்றக் கூடிய அரசியல்வாதியாக செயற்பட இருக்கின்றேன் என்றார்.