மண்முனை மேற்கு பிரதேசத்தில் இவ்வருட சிறுபோக நெற் செய்கையின் அறுவடை விழா

(எஸ்.சதீஸ் )

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில் இவ்வருட சிறுபோக நெற் செய்கையின் அறுவடை விழா வியாழக்கிழமை (02ம் திகதி ) நடைபெற்றது.

பிரதேச விவசாயிகள் ஒழுங்கு செய்த இவ் அறுவடை விழாவில் நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.டி. நிகால் சிறிவர்த்தன பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நெல் அறுவடையினை ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது பொங்கல் பொங்கி விஷேட பூசையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி எஸ்.எம்.பி.எம்.அஷார் மற்றும் உன்னிச்சை, றூகம் பிரதேச நீர்பாசன பொறியியலாளர்கள், உன்னிச்சை, றூகம் பிரதேச விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு நடைபெற்ற அறுவடை விழாவினைத் தொடர்ந்து  அண்மையில் புதிதாக  பணிப்பாளர் நாயகமாக பதவியேற்று பணிப்பாளர் நாயகமாக முதல் தடவையாக மட்டக்களப்புக்கு வருகைதந்த கே.டி. நிகால் சிறிவர்த்தனவை வரவேற்கும் நிகழ்வு ஆயித்தியமலை நீர்பாசனத் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் உன்னிச்சைத் திட்டம், உறுகாமம் திட்டம் போன்ற விவசாயிகளிடம் ஆராயப்பட்டது.

தற்போதய கொரோனா காலத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி அரசாங்கம் விளங்கிக்கொண்டுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடையவேண்டும். விவசாயத்தை மேலும் வளர்ச்சியடைய செய்ய என்னாலான சகல செயற் திட்டங்களையும் முன்னெடுப்பேன் இதில் குறிப்பாக விவசாய கால்வாய்களை அமைக்கவும் புனரமைக்கவும்  அதிக கவனம் செலுத்தி அத்தகைய திட்டங்களுக்காக அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்வேன். என பணிப்பாளர் நாயகம் கே.டி. நிகால் சிறிவர்த்தன தெரிவித்தார்.