அம்பாறையில் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற் காணிகளில் அறுவடைசெய்ய முடியாத நிலை

0
141

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாவட்டத்தின் கல்முனை மற்றும்
நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில்  நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால் 5000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற் காணிகளில் அறுவடைசெய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கல்முனைக் கண்டம் , நற்பிட்டிமுனை கீழ்-மேல் கண்டம், ஏத்தாளை நீண்டகரை, பண்டித்தீவு, சேவகப்பற்று மற்றும் மன்டூர் எல்லை போன்ற கண்டங்களிலுள்ள வயல் காணிகளே இவ்வாறு நீர் தேங்கி நின்று அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இலட்சக்கணக்கான முதலீடுகளை செய்து நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளின் நெற்பயிர்கள் தற்போது அழுகி விழுவதுடன் அறுவடை செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றன. இந்த நிலை தொடருமாக இருந்தால் சுமார் 2000 கோடி ரூபா நட்டம்  ஏற்படும் என விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முகத்துவாரத்தை வெட்டி நீரை ஓட விடுவதன் ஊடாக ஒருசில மணி நேரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர முடியும் எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் சில அரசியல் வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும் சுட்டிகாட்டுகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தாம் எதிர்நோக்கியுள்ள இந்தப்பிரச்சினைக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடித் தீர்வை பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.