இன்று பாடசாலைகள் ஆரம்பம்: கிழக்கில் கண்காணிப்பு திவீரம்!

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் கூறுகிறார்.
 (காரைதீவு  நிருபர் சகா)

நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் திடீரென இழுத்துமூடப்பட்ட அரசபாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும் இன்று 29ஆம் திகதி திங்களன்று பகுதியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் சமுகமளிப்பார்கள். ஆனால் மாணவர்கள் சமுகமளிக்கமாட்டார்கள். மாணவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக வரவழைக்கப்படவிருக்கிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகும்போது அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகள் சீராகப் பின்பற்றப்படுகின்றதா என்பதை அவதானிக்க வலயரீதியாக கண்காணிப்புக்குழுக்கள் விஜயம் செய்யவிருக்கின்றன.

இதற்கென மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுக்கும் கல்வி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் 15.2020 வழிகாட்டல் சுற்றுநிருபப்படி கொரோனாத் தடுப்பு செயற்பாடுகள் எந்தளவில் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு திருமலையிலிருந்து வலயம் தோறும் அதிகாரிகள் இன்றும் நாளையும் வருகைதரவுள்ளனர்;.

இதேவேளை அந்தந்த வலயமட்டத்திலும் கல்விசார் உத்தியோகத்தர்கள் இன்று பாடசாலைகளைத் தரிசித்து கண்காணித்து உரிய ஆலோசனைகளை வழங்குவதுடன் கல்வித்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 15 அம்ச செவ்வைபார்க்கும் பட்டியலை பூர்த்திசெய்யவுள்ளனர்.

கொரோனாத்தடுப்புச் செயற்பாடுகள் மற்றும் நேரசூசி தொடர்பில் பாடசாலைமட்டத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் அதிபரால் மேற்கொள்ளப்படவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வாரம் பாடசாலை சுத்தமாக்கல் தொற்றுநீக்கல் கைகழுவுசாதனங்கள் பொருத்துதல்  பெற்றோர் ஆசிரியர் நலன்விரும்பிகளை அழைத்து கலந்துரையாடி ஒத்துழைப்பைப்;பெறல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறவிருக்கின்றன.