இடைநடுவில் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தினை முடித்து தாருங்கள் .மட்டக்களப்பு மக்கள் கோரிக்கை

0
86

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் கம்உதாவ தேசிய வீடமைப்பு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டம் நிறைவு செய்யப்படாமையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தானை மற்றும் பிரம்படித்தீவு ஆகிய கிராமங்களில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் கம்உதாவ தேசிய வீடமைப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் திருத்தம் மற்றும் புதிய வீடுகள் அமைக்கும் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற கிராமங்களான முறுத்தானை கிராமத்தில் புதிய வீடுகள் 38 ஆரம்பிக்கப்பட்டதுடன், 14 வீடுகள் திருத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு பிரம்படித்தீவு கிராமத்தில் புதிய வீடுகள் 39 ஆரம்பிக்கப்பட்டதுடன், 20 வீடுகள் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இதன் காரணமாக வீடுகள் இன்றி தற்காலிக கொட்டில்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோணா வைரஸ் அச்சம், டெங்கு அபாயம் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவியேற்றதன் பிற்பாடு குறித்த வீடமைப்பு திட்டம் இடைநிறுத்தப்பட்டு ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சமான நோக்கு என்னும் தொனிப்பொருளில் கிராமத்துக்கு ஒரு வீடு எனும் திட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வீடுகள் இல்லாமல் இருந்த மக்களுக்கான புதிய வீடுகள் அமைத்து தருவதாக ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டமும் அத்துடன் திருத்த வேலைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட வீட்டு பயனாளிகளும் தங்களுக்காக வேலைகள் முடிவு பெறாத நிலையில் இடைநடுவில் நிறுத்தப்பட்;டதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கூலித் தொழிலையே பிரதான தொழிலான மேற்கொண்டு வரும் பிரதேச மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்தினையே வாழ்நாள் முழுவதும் கொண்டிருக்கும் மக்களுக்களின் கனவுகள் நிறைவேற வீட்டுத் திட்டம் முற்றுப்பெறுமா என்ற ஏக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்;.

எனவே குறித்த இடைநடுவில் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தினை தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூடிய கவனம் செலுத்தி ஜனாதிபதியின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.