தமிழர் தலைநகரில் தமிழர் பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்படுமா?

கதிர் திருச்செல்வம்.

சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் நாள் நடைபெவுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சிறிலங்காவின் சனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்லியல் சான்றுகளைப் பாதுகாப்பதற்காக பதினொரு பேர் கொண்ட செயலணியினை அமைத்துள்ளார்.
அச்செயலணியில் கடும் போக்குவாத பௌத்த மதகுருமார்களும் படைத்தரப்பினைச் சேர்ந்தவர்களும் பேரினவாதச் சிந்தனை கொண்ட சிங்களவர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கில் ஏண்ணிக்கையில் தமிழ் பேசும் மக்களே அதிகவில் வாழ்கின்ற நிலையில் ஒரு தமிழ் பேசும் நபரையாவது இணைத்தக் கொள்ளாது செயலணி உருவாக்கப்பட்டமையின் நோக்கத்தினை எந்தச் சின்னப் பிள்ளையினபலும்; எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான செயலணியின் நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களது வாழ்விடங்கள் பற்றிய கேள்விக்குறியினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தேர்தலின் போது எதிர்க்கட்சிகளில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்குமானால் சனாதிபதி அவர்கள் என்ன நோக்கத்திற்காக செயலணியினை நிறுவினாரோ அந்நோக்கங்கள் நிறைவேற்றுதல் எளிதாகி விடும்.
இந்நிலையில் தமிழ் பேசும் மக்களின் இரு பெரும் கூறுகளாக நோக்கப்படுகின்ற தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்கள் பிரதிநிதிகளை சிந்தித்து தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
கிழக்கிலே தமிழர்கள் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகளவானோரை வெல்ல வைப்பதும் முஸ்லிம் மக்கள் தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களித்து அதிகளவில் முஸ்லிம் பிரதிநிதிகளை வெல்ல வைப்பதும் செயலணியின் செயற்படு வேகத்தைக் குறைப்பதற்கு வழிகோலும் என நம்பலாம்.
கிழக்கு மாகாணத்திலே திருக்கோணமலையில் நான்கு, கட்டக்களப்பில் ஐந்து, அம்பாறையில் ஏழு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெறக்கூடிய கள நிலையே உள்ளது. நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்pனர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெற்றி பெறுவதற்கேற்ற வகையில் மட்டக்களப்பு தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான செயற்பாடுகளில் தமிழ் மக்கள் ஈடுபட வேண்டும். அதற்கு மட்டக்களப்பு புத்திசீவிகளும் களத்தில் தம்மை அர்ப்பணித்தேயாக வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாகக் கூடிய களநிலை காணப்படுகிறது.
அம்பாறையில் வெற்றி பெறுகின்ற நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் தொலைபேசிச் சின்னத்தில் வெற்றி பெற வேண்டியது காலத்தின் தேவை.
ஜனாப் அதாவுல்லா தலைமையில் களமிறங்கியுள்ள தேசிய காங்கிரஸ் ஒரு உறுப்பினரைப் பெறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவே களநிலை உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றாலும்கூட தமிழ்பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு கிழக்கில் அனைத்து நாடாளுமன்ற தமிழ்பேசும் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்னவர வேண்டும்.
ஜனாப் அதாவுல்லாவின் கருத்தக்களை சனாதிபதியோ அல்லது பொது சனப் பெரமுனக் கட்சியினரோ(மொட்டுக் கட்சி) காதுகொடுத்துக் கேட்பார்கள்; என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்பதனை திருக்கோணமலை மாவட்டத்தில் வேட்பாளர் நியமனத்தின் போது மூதூரைச் சேர்ந்த மருத்துவர் சியா அவர்களை நியமிக்காது விட்டதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம்.
அம்பாறையில் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாது போவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றன. பலவேறு தமிழ்க் கட்சிகளின் பிரசன்னம் இதனைக் கூறுகின்றது. ஆனால் விருப்பு வாக்குகளிற்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒரு நாடாளுமனற உறுப்பினரை வெற்றிபெற வைப்பதற்கான செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடைமுறைப்படுத்த வேண்டும்.
திருக்கோணமலை மாவட்டத்தின் நிலையினை விரிவாக ஆராய்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.
தொலைபேசி சின்னத்திலே சஜித் அணியில் ஜனாப் இம்ரான் மஹரூப், றிசாத் அணியில் ஜனாப் அப்துள்ளா மஹரூப், ஹக்கீம் அணியில் ஜனாப் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூவரும் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களிடத்திலே செல்வாக்கு உள்ளவர்கள்.
மொட்டுச் சின்னத்திலே போட்டியிடுகின்ற ஜனாப் உவைஸ் அவர்களும் தம்பலகமம் பிரதேச சபையின் தலைவர் ஜனாப் சுபியான் அவர்களும் ஓரளவு வாக்குகளைச் சேகரிக்கக் கூடியவர்களே. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மொட்டுச் சின்னத்திலிருந்து தெரிவாக வேண்டுமெனில் ஆகக் குறைந்தது 23000 விருப்பு வாக்குகளாவது பெற வேண்டியிருக்கும். அவ்வாறு பெறக்கூடியவராக ஜனாப் எம்.எஸ்.உவைஸ் காணப்படுகிறார்.
அவ்வாறு ஜனாப் எம்.எஸ். ஊவைஸ் வெற்றி பெற்றால் நான்கு பேருமே தமிழ் பேசும் மக்களினிலிருந்து திருக்கோணமலை மாவட்டத்திலருந்து முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லும் வரலாற்று நிகழ்வாக அது இருக்கும்.
(தொலைபேசி, மொட்டு, யானை சின்னங்கள் உத்தேசமாகப் பெறக்கூடிய வாக்குகள்.)
உள்ளுராட்சி மன்றம் தமிழர் முஸ்லிம் சிங்களவர் மொத்தம் தொ.பேசி மொட்டு யானை
சேருநுவர பிரதேசசபை   1951  1864  7124  10939  3500  4000  500
வெருகல் பிரதேசசபை    8434 1 3 8438 500 300 200
கந்தளாய் பிரதேசசபை    1170 5768 29157 36095 8000 15000 1000
தம்பலகமம் பிரதேசசபை   4347 12491 5486 22324 7000 6000 1000
மொறவே பிரதேசசபை    844 1050 4342 6236 1000 2500 100
கோமரங்கடவெல பிரதேசசபை   17 0 6250 6267  800 3500 100
பதவிசிறிபுர பிரதேசசபை         0 0 9034 9034 1000 6000 500
திருக்கோணமலை நகரசபை     23136 3622 4988 31746 2500 3000 500
தி.மலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை    21774 5387 10020 37181 5000 7000 1000
குச்சவெளி பிரதேசசபை    8860 16284 672 25816 8700 3000 500
மூதூர் பிரதேசசபை    18421 27046 193 45660 14000 3000 1000
கிண்ணியா பிரதேசசபை    95 22495 0 22590 12000 5000 1000
கிண்ணியா நகரசபை   1769 24774 2 26545 16000 4000 1000
மொத்தம்       90818 120782 77271 288871 80000 62300 8400

தமிழர் தரப்பிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்கள் போலல்லாது திரு சம்பந்தன் ஐயா தலைமையில் பலவீனமான நிலையில் தேர்தலைச் சந்திக்கிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவன மயப்படுத்தப்படாத செயற்பாடுகள், செயற்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்படாமை, கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டமை, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கணக்கிலேயே எடுக்கப்படாது புறக்கணிக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகள் திருக்கோணமலையில் கட்சியை பலவீனமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
கட்சி புனரமைப்பு அல்லது புதிய கிளைகள் உருவாக்கம் என்ற பெயரிலே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சிலரை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தப் பட்டமையினால் சிறந்த செயற்பாட்டாளர்கள் கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
திருக்கோணமலை மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு உறுப்பினர்கூட வெற்றிபெற முடியாதவாறு தமிழர் தரப்பிற்கு ஏற்பட்ட நிலை இம்முறையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் உள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
திருக்கோணமலை மாவட்டத்தில் ஈருருளி, மீன், வீணை, மெழுகுதிரி ஆகிய சின்னங்களிலே போட்டியிடுகின்ற கட்சிகள் கணிசமான வாக்குகளை தம்வசம் எடுத்துக்கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான பிரதிநிதித்துவம் இல்லாது போய்விடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
(வீடு, ஈருருளி, மீன், ஆகிய சின்னங்களளின் கட்சிகள் கள நிலையின் அடிப்படையில் உத்தேசமாகப் பெறக்கூடிய வாக்குகள்.)
உள்ளுராட்சி மன்றம் தமிழர் முஸ்லிம் சிங்களவர் மொத்தம் வீடு ஈருருளி மீன் மொத்தம்
சேருநுவர பிரதேசசபை 1951 1864 7124 10939 900 400 100 1400
வெருகல் பிரதேசசபை 8434 1 3 8438 2500 2000 500 5000
கந்தளாய் பிரதேசசபை 1170 5768 29157 36095 750 100 100 950
தம்பலகமம் பிரதேசசபை 4347 12491 5486 22324 1500 1200 300 3000
மொறவே பிரதேசசபை 844 1050 4342 6236 300 100 50 450
கோமரங்கடவெல பிரதேசசபை 17 0 6250 6267 0 0 0 0
பதவிசிறிபுர பிரதேசசபை 0 0 9034 9034 0 0 0 0
திருக்கோணமலை நகரசபை 23136 3622 4988 31746 8000 1500 750 10250
தி.மலை பட்டணமும் சூழலும் பிரதேசசபை 21774 5387 10020 37181 7500 2000 1500 11000
குச்சவெளி பிரதேசசபை 8860 16284 672 25816 2500 500 1250 4250
மூதூர் பிரதேசசபை 18421 27046 193 45660 8300 2500 600 11400
கிண்ணியா பிரதேசசபை 95 22495 0 22590 0 0 0 0
கிண்ணியா நகரசபை 1769 24774 2 26545 750 200 100 1050
மொத்தம் 90818 120782 77271 288871 33000 10500 5250 48750

இவற்றினைத் தவிர மெழுகுதிரி, வீணை ஆகிய சின்னங்களில் போட்டியிடுகின்ற கட்சியினரும் அண்ணளவாக 5000 வாக்குகள் பெறக்கூடிய வாய்ப்புகளே உள்ளன.
திருக்கோணமலை மாவட்டத்திலே பொதுவாகவே நாடாளுமன்றத் தேர்தல்களிலே வாக்களிப்பானது தமிழ் மக்கள் 60 வீதமாகவும் (2004 தவிர), முஸ்லிம் மககள் 85 வீதமாகவும் சிங்கள மக்கள் 55-60 வீதமாகவும் இருந்திருக்கின்றது.
திஜருக்கோணமலை மாவட்டத்திலே உள்ள தமிழ் மக்கள் தேர்தலிலே வெறுப்படைந்த நிலையில் இருப்பதனால் இம்முறை தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதமானது குறைவடையலாம் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலை மாற்றப்படல் வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தம்மை அர்ப்பணித்து வீடு வீடாகச் சென்று தமது பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள கள நிலையினை ஆராய்கின்ற போது தொலைபேசிச் சின்னம் இரண்டு உறுப்பினர்களையும் மொட்டு, வீடு தலா ஒரு உறுப்பினர்களையும் பெற்றுக் கொள்ளும்.
தொலைபேசி சின்னத்திலே; போட்டியிடுவோர் அண்ணளவாக 80000 இற்கும் அதிகமான வாக்குகளையும் மொட்டுச் சின்னத்திலே போட்டியிடுபவர்கள் 62000 இற்கும் அதிகமான வாக்குகளையும் வீட்டுச் சின்னத்திலே போட்டியிடுபவர்கள் 33000 வாக்குகள் அளவிலும் பெறக் கூடியவாறு களநிலை உள்ளது.
திருக்கோணமலை மாவட்டத்தில் வீட்டுச் சின்னத்திற்கான வாக்குகள் குறைந்தபட்சம் 40000 ஆவது பெறப்பட வேண்டும். அவ்வாறு வாக்குகள் கிடைக்க வேண்டுமெனில் தமிழ் மக்கள் 75 வீதமாக வாக்களிப்பில் ஈடுபட வேண்டும்.
அவ்வாறு 75 வீதமான வாக்களிப்பு நிகழ்ந்தால் திருக்கோணமலை மாவட்டத்திலுள்ள 90818 தமிழ் வாக்குகளில் 68000 வாக்குகள் அளிக்கப்படும்.
அவ்வாக்குகளில் 3000 வரையான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்ற வாக்குகளாக பதிவாகும்;.
மிகுதி 65000 வாக்குகளில் ஈருருளி-10000, மீன்-5000, வீணை-3000, மெழுகுதிரி-2000, மணி-1000, தொலைபேசி-2000, மொட்டு-1000 என்ற அடிப்படையில் கட்சிகள் பெற்றுக் கொள்ளும்.
மிகுதியாக எஞ்சுகின்ற வாக்குகள் 40000 வாக்குகள் வீட்டுச் சின்னத்திற்குக் கிடைக்கும். ஒரு உறுப்பினர் தெரிவாவதற்கான பாதுகாப்புநிலையில் வாக்குகள் உள்ளதெனக் கொள்ளலாம்.
இதுவே இவ்வாண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெறக்கூடிய அதிக பட்ச தமிழர் வாக்குகளாகும்.
திருக்கோணமலை மாவட்டத்தின் நிலையினை உணர்ந்து குறைவான எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகள் தேர்தலில் இருந்து பின்வாங்க வேண்டும்.
அவ்வாறு நடைபெறாது விடின் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பிற்கு பாதகமான நிலையினை ஏற்படுத்திய பொறுப்பிற்கு அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்நிலையில் திருக்கோணமலையில் உள்ள புத்திசீவிகள் ஒன்று கூடி அமைப்பொன்றினை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அறிய முடிகின்றது.
அவ்வாறான அமைப்பு திருக்கோணமலையில் தற்போது தேவையானதுமாகும். அமைக்கப்படுகின்ற அமை;பினர் குறைந்தளவு வாக்குகளை பெறக்கூடிய நிலையில் உள்ள கட்சிகளை அழைத்து தேர்தலில் இருந்து விலக வேண்டியதன் தேவையினை வலியுறுத்தி விலகுவதற்கான கோரிக்கையினை முன்வைக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழர் தலைநகர் எனக் கூறப்படுகின்ற திருக்கோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தினை தக்கவைத்துக் கொள்ள இதுவே எம்முன் உள்ள இறுதி வழிமுறையாகும்.
இந்த நிலையில் தேசிய காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் நிராகரிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் 29ஆம் நாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. நீதிமன்றத் தீர்ப்பு தேசிய காங்கிரசுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைத்தால் கள நிலமைகள் மாற்றமடையும். அல்லது தேர்தல் திருக்கோணமலை மாவட்டத்தில் பிற்போடப்படலாம்.

கதிர்.திருச்செல்வம்,
தம்பலகமம்.