ஓட்டமாவடியில் பிரபல்யபோதைப்பொருள் வியாபாரி கைது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் வெவ்வேறு இடங்களில் 2440 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓட்டமாவடி முன்றாம் வட்டாரத்தில் பரிதா பேக்கரி வீதியில் வசிக்கும் 33 வயதுடைய பிரபல்ய போதைப் பொருள் வியாபாரியிடம் இருந்து 1280 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் பரிகாரியார் வீதியில் வசிக்கும் 29 வயதுடைய நபரிடம் இருந்து 1160 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் துசிதகுமார தலைமையில் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹா குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின், போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் அதிகம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.