களங்கள் இன்றி வீதிகளை நாடும் விவசாயிகள்!

(படுவான் பாலகன்) வருடாந்தம் வேளாண்மை செய்வதும், அறுவடையை உரிய விலைக்கு விற்க முடியாது, கொள்வனவாளர்களின் விலைக்கு கொடுத்துவிட்டு செல்வதும்தான் மட்டக்களப்பு விவசாயிகளின் நிலையாகிவிட்டது. தற்போது சிறுபோக விவசாய செய்கை அறுவடை ஆரம்பித்துள்ளது. நெல்லினை உரிய விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்ற அவாவவில் நெல்லுக்கான விலையை தீர்மானித்து கொள்வனவு செய்யும் நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முன்னெடுக்கின்றமை வரவேற்கத்தக்கது.

ஆனாலும் அறுவடையின் போதும், அறுவடையின் பின்னரும் விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்கின்ற போது, நெல்லில் சிறிய அளவில் ஈரத்தன்மை ஏற்படுவதுடன், பதர்களும் காணப்படுகின்றன. இதனால் நெல்லினை காய வைக்க வேண்டிய தேவை விவசாயிகளுக்கு உண்டு. அவற்றினை காயவைப்பதற்கு வீடுகளில் இடமில்லை. வயல்களிலும் காய வைக்கமுடியாது இதனால் நெல்லினை அறுவடை செய்தவுடன் உடனடியாக விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். இந்நிலை குறைவிலைக்கு நெல்லினை விற்க வேண்டிய சூழலை உருவாக்கி விடுகின்றது.

ஒருசிலர் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் வீதிகளில் நெல்லினை காயவைத்து விற்பனை செய்கின்றனர். இதன்போது பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகின்றனர். குறிப்பாக வீதிகளில் வாகனங்கள் செல்கின்ற போது, நெல்லினை மிதித்துவிட்டு செல்கின்றன. இதனால் நெல் உடைந்து அரிசியாகும் நிலை ஏற்படுகின்றது. மேலும் நெற்களில் ஏனைய தூசிகள், சிறிய சிறிய கற்களும் சேர்கின்றன. இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பது விவசாயிகளுக்கு சிரமத்தினைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இதற்காக பொதுக்களங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளிள் நீண்டகால கோரிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால் அவை முற்றுமுழுதாக சாத்தியமாகவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியிலேயே அதிகளவிலான வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. எனவே குறித்த பகுதியில் களங்களை அமைப்பதன் ஊடாக நெல்லினை காய வைத்து சந்தைப்படுத்தல் சபையின் தீர்மானங்களுக்கேற்ப நெல்லினை விற்கும் வாய்ப்பினை விவசாயிகள் பெறுவார்கள். ஒவ்வொரு தடவையும் கடன்களையும், அடகு வைத்தும் விவசாயத்தினை மேற்கொண்டு, உரிய விலைக்கும் விற்காது, பிறர்வாழ தம்மை அர்ப்பணிக்கும் விவசாயிகளின் வருமானத்தினை அதிகரித்து, மாவட்டத்தின் மக்களை அபிவிருத்தி பாதைக்கு இட்டுசெல்ல எனவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும், எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினர்களும் திட்டத்தினை தீட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.