நான்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தமிழ் மக்களே 75வீதத்திற்கு மேல் வாக்களிக்க தயாராகுங்கள்.

 இரா.துரைரெட்ணம் அழைப்பு.

(செல்லையா. பேரின்பராசா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் பொதுத் தேர்தலில் நான்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக தமிழ் மக்களை 75வீதத்திற்கு மேல் வாக்களிக்க தயாராகுமாறு பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப். மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம்  அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம் மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். வாக்கு வீதத்தைப் பொறுத்தவரையில் அண்ணளவாக 75வீதம் தமிழர்கள்,(இரண்டு இலட்சத்தி தொன்னூறாயிரம் வாக்குகளுக்கு மேல்) 24வீதம் முஸ்லிம்கள், (தொன்னூறாயிரம் வாக்குகளுக்குமேல்) 01வீதம் சிங்களவர்கள் (மூவாயிரம்  வாக்குகளுக்கு மேல்) உள்ள நிலையில் 75வீதத்திற்கு நான்கு தமிழ் பிரதிநிதிகளையும் 24வீத்திற்கு ஒரு முஸ்லிம் பிரதிநிதியையும் தெரிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் தமிழர்கள் வாக்குவீதம் குறைவாக அளிக்கப் பட்டதால் இதற்கு மாறாகவே பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டது கசப்பான விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எமக்கு அளிக்கப்பட்ட ஒரு இலட்சத்தி இருபத்தெழாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளுடன், எமக்கு அளிக்கப்படாமல் இருந்த வாக்குகளில் ஆறாயிரம் வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டிருந்தால் நான்கு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமிழர்களாகிய நாம் பெற்றிருக்க முடியும். இந்த வலியை உணர்ந்தவர்களாக பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழர்கள் வாக்களிக்க தயாராகுமாறு திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்படுகின்ற அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் பங்காளிகளாகவும், அதிகாரப்பங்கீடு தொடர்பான விடயங்களில் உரிமை கொண்டவர்களாவும் இருப்பதற்கு செயற் திட்டங்களை வகுக்க வேண்டும். பௌத்த தேசியவாதம் தமிழர்கள் தொடர்பாக
வலுவடைந்த நிலையில் தமிழர்களாகிய நாங்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவே எமக்கான நியாயங்களை நிறுவுவதற்கு களம் அமைக்க முடியும். இந்த வகையில் வீதாசாரத்திற்கு ஏற்ற நான்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தடையாக உள்ள வாக்குகளை பிரிப்பதற்கான தமிழ் பிரதிநிதிகளை இல்லாமல் செய்வதற்கான, வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான, திட்டங்களை முறுகியடித்து  பலமான ஆளுமைமிக்க தமிழ் பிரதிநிதிகளுக்கான களத்தை அமைத்துக் கொள்ள வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.