24மணிநேரமும் எமது சீற்றிஸ்கன் கதிரியக்கவியல்பிரிவு இயங்கும்

ஒரு வாரத்தில் அன்ஜியோகிறாம் சேவையும் ஆரம்பிக்கப்படும்.
கல்முனை ஆதாரவைத்தியசாலை கதிரிவியக்கவியல் வைத்தியநிபுணர் டிலக்குமார்.
காரைதீவு  நிருபர் சகா


கடந்த 10வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த முயற்சியின் பலனாக தற்போது எமது வைத்தியசாலையில் சீற்றி ஸ்கன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அச்சேவையை பொதுமக்கள்  24மணிநேரமும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் கதிரியக்கவியல்பிரிவு வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் சுந்தரலிங்கம் டிலக்குமார் தெரிவித்தார்.
புதிதாக இப்பிராந்தியத்தில் சீற்றி ஸ்கன் வசதி ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக பொறுப்புவைத்தியநிபுணர் என்ற அடிப்படையில் அவரிடம்கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இதேவேளை சீற்றி ஸ்கன் வசதிக்கு அப்பால் உயர்தரத்திலான அல்ட்ரா சவுண்ட் ஸ்கன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஈரல் தொடர்பிலான நோய்களையும் புற்றுநோய்க்கட்டிகளை இனங்காணவும் முடியும்.
எனவே இவ்வசதிகளை பொதுமக்கள் நன்கு உரியவேளையில் வந்துபெற்றுக்கொள்ளலாம்

இறுதியாக நல்லதொரு செய்தி. அதாவது இரத்தக்குழாய் அடைப்பை பரிசோதிக்கும் அன்ஜியோகிறாம் சோதனை எமதுவைத்தியசாலையில் இன்னும் ஒருவாரத்தில் ஆரம்பித்தவைக்கப்படும். அருகிலுள்ள வைத்தியசாலைகளும் இவ்வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.