மண்முனை தென்மேற்கில் முன்னுரிமைப்படுத்தி செய்யப்பட வேண்டிய இரு பாலங்கள் – அமைப்பதற்கு முன்வரும் பிரதிநிதிகள் யார்?

0
298

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் செய்யப்பட வேண்டும் என்பது பலரின் கருத்தும், எதிர்பார்ப்பும். அதிலும் பரந்து விரிந்துள்ள படுவான்கரைப்பிரதேசம் பல்துறைகளில் அபிவிருத்தி காணவேண்டிய நிலையில் உள்ளது. இப்பிரதேசத்தில் அமைந்துள்ள மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் போக்குவரத்து பாதைகள் சீர்செய்யப்பட வேண்டியும், பாலங்கள் அமைப்பட வேண்டிய அவசியமும் உள்ளது. மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கு செல்வதற்கு சில பிரதேசங்களில் இருந்து நீர்மார்க்கமாக செல்ல வேண்டியும் உள்ளது. அவ்வாறு செல்ல முடியாதபோது, நீண்ட தூரம் பயணித்து குறித்த பிரதேசத்திற்கு செல்ல வேண்டியும் உள்ளது.

மண்முனை பாலம் அமைப்பதற்கு முன்பு, மிகவும் சிரமக்கொண்டு நீர்வழிப்போக்குவரத்து செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிருந்தது. இதனூடாக பயணத்தினை மேற்கொண்ட பலர் மரணித்தமையும் வரலாறு. குறித்த மண்முனை ஆற்றிற்கு பாலம் அமைக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேசத்திற்கான போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, ஆரையம்பதி போன்ற பிரதேசசபை எல்லைகளுக்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச மக்கள் சென்று வருவது இலகுவானதே. ஆனாலும், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவிற்கு செல்வதற்காக, அல்லது அங்கிருந்து மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கு மக்கள் வருகை தருவதற்கு அம்பிளாந்துறை ஆற்றின் ஊடாக பயன்பாட்டில் உள்ள படகுச்சேவையையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறித்த ஆற்றிற்கு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. அவ்வாறு அமைக்கப்படுவதன் ஊடாக குருக்கள் மடத்தில் இருந்து தாந்தாமலை வரையுள்ள மக்கள் பெரிதும் நன்மையடைவர். குறித்த படகுச்சேவை நிறுத்தப்படுகின்ற அல்லது குறித்த நேரத்தின் பின்னர் இயங்காது இருக்கின்ற நேரத்தில் அதிக தூரம் பயணிக்கின்ற நிலைமை தற்போதைய சூழலில் காணப்படுகின்றது.

இதே போன்று, காஞ்சிரங்குடா – முனைக்காடு ஆற்றின் ஊடாக பலரும் தோணிகளில் பயணம் செய்தமை வரலாறு. இதனூடாக பயணித்த பலர், நீரில் மூழ்கி மரணித்தமையும் கடந்த கால அனுபவங்கள். இவ் ஆற்றுக்கு பாலம் அமைக்கப்படுவதன் ஊடாக மகிழடித்தீவில் இருந்து உன்னிச்சை வரையான மக்கள் பயனடைவர். குறித்த ஆற்றினை பலரும் பார்வையிட்டுச் சென்றிருந்தாலும் இன்னமும் அதற்கான எந்தவித நிதி ஓதுக்கீடுகளோ, வேலைப்பாடுகளோ நடந்தேறவில்லை. 500மீற்றரில் பயணிக்க வேண்டிய இடத்திற்கு 7கிலோமீற்றருக்கு மேல் இவ்வாற்றுக்கு பாலம் அமைக்கப்படாமையினால் பயணிக்கவேண்டிய துர்ப்பாக்கியம் உள்ளது. இப்பாலம் அமைக்கப்படுவதன் பயனாக அதிகளவில் மாணவர்களும், விவசாயிகளும் பயன்பெறுவர். குறித்த பிரதேசத்திற்குள் வசதி, வாய்ப்புகளுடன் கூடிய பாடசாலைகளில் கற்ககூடிய, பிரத்தியேக வகுப்புக்களில் கலந்துக்கொள்ளக்கூடிய தன்மை மாணவர்களுக்கு இதன்மூலமாக ஏற்படும்.

எனவே, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சிறுசிறு பாலங்கள், வீதிகள் அமைக்கப்பட வேண்டியுள்ள நிலையில், அம்பிளாந்துறை ஆறு, காஞ்சிரங்குடா ஆறு, ஆகிய இரண்டிற்கும் பாலம் அமைக்கப்பட வேண்டிய தேவை முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும். என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையுமாகும். இதனை செய்யக்கூடிய வல்லமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உண்டே. எனவே தெரிவு செய்யப்படப்போகும் 5உறுப்பினர்களும் இதனை கவனத்தில் கொண்டு இதனை செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பாகும்.