கொவிட் 19 தொடர்பான சுகாதார நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கே வகுப்புகளை நடாத்த அனுமதி

0
156
கொவிட் 19 தொடர்பான சுகாதார நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கே வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

வரையறைக்குட்பட்ட வகையில்‌ தனியார்‌ வகுப்புக்களை எதிர்வரும் ஜுன்‌ 29ஆம்‌ திகதி, திங்கட்கிழமை தொடக்கம்‌ மீள ஆரம்பிப்பது தொடர்பில் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தெளிவுறுத்தும் கூட்டமானது இன்று (19.06.2020) மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

அதற்கமைய மேலதிக வகுப்புகள் நடாத்தப்படும்‌ இடத்தில்‌ இட அளவிற்கு அமைவாக சமூக இடைவெளியை பேணி, உரிய சுகாதார எற்பாடுகளுடன் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தனியார் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தினை அடிக்கடி கிருமி தொற்று நீக்குதல், கை கழுவுதற்கான ஏற்பாடுகளை செய்தல், முகக்கவசம், கையுறை அணிதல் தொடர்பில் மாணவர்களுக்கு விளிப்புணர்வுகளை மேற்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, அதற்கான பதாதைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் மாநகர ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே.கிரிசுதன் ஆகியோரால் தெளிவுறுத்தப்பட்டது.

அத்துடன்  தனிமைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளை செய்தல், பொருத்தமான நிகழ் நிலை தளங்கள் மூலமாக கற்பித்தலை ஊக்குவித்தல் அல்லது தொலை தூர கற்றல் முறை மூலம் விரைவுரைகள் குறிப்புக்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேற்படி சுகாதார நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மாத்திரமே கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவ்வாறு அனுமதி பெறப்படாமல் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கையும் விடப்பட்டது.

மேற்படிக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, சுகாதார பரிசோதகர்கள், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள்,  தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.