கொழும்பில் தமிழ் மொழி மூலமான ஆரம்ப பாடசாலைகள் அதிகரிக்கப்பட வேண்டும். -கலாநிதி வி.ஜனகன்…!

கல்வித் துறையைப் பொறுத்த வரையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்,
“கொழும்பில் அண்ணளவாக இரண்டரை இலட்சம் தமிழ் மக்களும், இரண்டரை இலட்சம் முஸ்லிம் மக்களுமாக மொத்தம் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர்.
ஆனால், கொழும்பு மாவட்டத்தில் இருக்கக்கூடிய மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.
“அதேநேரம் இந்தப் பாடசாலைகளைப் பொறுத்த வரை ஆரம்ப பாடசாலைகளுக்கு உள்ள பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. குறிப்பாக கொலன்னாவை, இராஜகிரிய, மொரட்டுவ, மஹரகம மற்றும் நுகேகொட போன்ற பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் பல தமிழ் பேசும் மாணவர்கள் சிங்கள மொழி மூலத்தில் கல்வி கற்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு உள்ள பற்றாக்குறையே இதற்கான காரணமாகும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பொதுவாக 5 கிலோமீற்றர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கே குறிப்பிட்ட பாடசாலையொன்றில் அனுமதி வழங்கப்படும். ஆனால், அதற்கு அப்பால் வசிக்கும் தமிழ் பேசும் மாணவர்கள் தமக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகளுக்கே செல்லவேண்டிய நிர்பந்தத்துக்கு உட்படுகிறார்கள்.
“இந்தநிலைமையில், குடும்பத்தில் தாயும் தந்தையும் தமிழில் பேசுகின்றபோதிலும்; பிள்ளை சிங்களத்தில் பேச வேண்டிய நிலையில் உள்ளது.
எனவே, முதலாவதாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பேசும் மாணவர்களுக்கு கட்டாயமாக ஆரம்ப பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவதாக கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கூறப்பட்ட விடயம் தொடர்பாக குறிப்பிட்ட அவர், “இனிவரும் காலங்களில் மாவட்டங்கள் தோறும் தமிழ் மொழிமூலமான தனிப்பாடசாலை, சிங்கள மொழிமூலமான தனிப்பாடசாலை என்று வேறுபடுத்தாமல் எல்லா பாடசாலைகளிலும் இரு மொழி மூலங்களும் சேர்ந்து இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
“அதில் பிரச்சினையொன்றும் இல்லை. ஆனால், அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னர் ஏற்கெனவே இருக்கின்ற றோயல் கல்லூரி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி போன்ற மும்மொழி பாடசாலைகளிலும் ஏனைய பாடசாலைகளிலும் இருக்கின்ற கட்டட வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
“அதனடிப்படையில் தமிழ் மொழிமூல கற்கையை மேம்படுத்த வழிவகுக்க வேண்டும். ஒரு பாடசாலையை புதிதாக நிர்மாணிப்பதற்குப் பதிலாக இந்த வழிமுறை மிக பயன்மிக்கதாக இருக்கும்.
“கொழும்பில் காணியொன்றைப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாகும். எனவே, ஏற்கெனவே இருக்கக் கூடிய பாடசாலைகளில் தமிழ் மொழி மூல கற்கையை அதிகரிப்பது முதலாவது வழிமுறை.
அதனைத் தொடர்ந்து அந்தப் பாடசாலைகளுக்கு தமிழ் பேசும் மாணவர்களை உள்வாங்குவது இலகுவாக இருக்கும்.
“அதன்படி, இந்தத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.
“அனைத்துக்கும் மேலாக ஆரம்ப பாடசாலைகளை அரசாங்கம் நிறுவ வேண்டும். அது மிகவும் கடுமையான விடயம் அல்ல. அதேவேளை, பாலர் பாடசாலைகள் கூட தமிழ் மொழியில் மிகவும் அரிதாகவே உள்ளன. வெள்ளவத்தையில் கூட பற்றாக்குறையாகத்தான் இருக்கின்றது.
இது தொடர்பில் அரசாங்கத்திடம் ஒரு முறையான கட்டமைப்புத் திட்டம் இல்லை.
“அடுத்ததாக 6 ஆம் தரத்துக்கு மேற்பட்ட இடைநிலை கல்வியை மாணவர்கள் தொடர்வதற்கு கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலைகளில் அந்த வகுப்புகளை அதிகரிக்க வேண்டும்.
அவ்வாறு அதிகரித்தால் கொழும்பில் இருக்கக்கூடிய தமிழ் பேசும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புக் கிடைக்கும்.
“இங்கு தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியில் தம் கல்வியைத் தொடர்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் எங்களுடைய மொழி, எங்களுடைய இனம் பாதுகாக்கப்பட வேண்டும். சிங்களத்தை அறிந்து கொள்வது எங்களுடைய விருப்பமாக இருந்தாலும், சிங்கள மொழியில் மாத்திரம்தான் கற்றாக வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகக் கூடாது.
“குறிப்பாக பெரும்பாலான பெற்றோர்களுக்கு சிங்களத்தில் அவ்வளவாகப் பரிட்சயமில்லை. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்கும் போது அவர்கள் வீட்டுக்குச் சென்ற பின்னர் பெற்றோர்களால் உதவ முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது. இது மாணவர்களின் கல்வி நிலையை தாழ்வு மட்டத்துக்குக் கொண்டு வருகின்றது.
எனவே, தமிழ் பேசும் மாணவர்கள் இவ்வாறு செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே தனதும் தன் கட்சித் தலைவர் மனோ கணேசனின் நிலைப்பாடு எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் மேலும் தெரிவித்துள்ளார்.