தமிழ் நாடகப் பேராசிரியர் மௌனகுருவிற்கு இன்று வயது 77.கலாநிதி எம் பி ரவிச்சந்திரா,

அறிமுகம்-
வீழ்வதும் எழுவதும் பலமுறை ஆயினும் அது வரலாறு ஆக வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்பவர் பேராசிரியர் சி.மௌனகுரு.  ”படைப்பது மாத்திரமே எமது செயல். படைப்பு சுவைஞரிடம் சென்றதும் அது அவர்களுடையதாகிவிடுகிறது” எனும் முகநூல் வாசகத்தின் உருத்துக்காரர்  எங்களின் சிற்பி அவர். எங்களைச் செதுக்கியவர். அவரால் நாங்கள் கருத்துடைய சிற்பங்களாக நிற்கிறோம். அவரது பன்முக ஆளுமையின் சிருஷ்டிப்புக்கள் நாம். அவர்களின் 77ஆவது அகவை பூர்த்தியினை முன்னிட்டு வாழும்  அறிஞர் பெருமகனை வாழும்போதே வாழ்த்துதல் பேருவகையுடையது. ஆத்மார்த்தமானது.
கல்வி –
இந்த வகையில் பேராசிரியர் மௌனகுரு தொடர்பான சில வரலாற்றுப் பதிவுகளை இப்பகுதியில் பதிவிட முனைகிறேன். 1943-06-09 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள சீலாமுனைக் கிராமத்தில் சின்னையா முத்தம்மா தம்பதிகளின் புதல்வராகப் பிறந்த இவர் 1948 முதல் 1953 வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த மிசன் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியைத் தொடர்ந்தார். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பெற்று வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1954 முதல் 1960 வரையான காலப்பகுதியில் தனது இடைநிலைக் கல்வியையும் உயர்தரக் உயர்தரக் கல்வியையும் கற்று 1961 தொடக்கம் 1965 வரையான காலப்பகுதியில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டத்தை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்.
1 974 தொடக்கம் 1975 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கையை மேற்கொண்டு சித்தியடைந்தார். பின்னர் 1970 முதல் 1973 வரை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தை பெற்றதோடு 1980இல் கலாநிதி  பட்டத்தை பெற்றார். மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் அவரது கலாநிதிப் பட்ட ஆய்வு தலைப்பாக இருந்தது. ஈழத்தில் கலைமரபு பேணப்படும் கலைவளம் மிகுந்த மண்ணின் கலை வாழ்வியல் பெருமை பேசும் முதல் ஆய்வாக அது எழுந்தது.  அதுவே ஈழத்துக் கூத்துக்கலை பற்றிய தேடலை நோக்கிய பயணங்களின் மூலமும்  ஆயிற்று.
தொழில்-
1865, 1966 காலப்பகுதியில் பகுதி நேர ஆசிரியராக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு இந்துக்கல்லூரி இவற்றில் கடமையாற்றியதுடன் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பகுதி நேர விரிவுரையாளராக கடமையாற்றினார்.
நிரந்தர தொழில் உதவி ஆசிரியராக 1966இல்  கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதவியேற்ற இவர் கல்முனை வெஸ்லி கல்லூரியில் 1968 உதவி ஆசிரியராக இடமாற்றம் பெறுகிறார் . 1970 வரை- அங்கு  கடமையாற்றிய அவர் மீண்டும் இடமாற்றம் பெற்று கல்முனை சாஹிரா கல்லூரியில் கடமையாற்றுகிறார். பின்னர் அதே ஆண்டில் தான் கல்வி கற்ற பாடசாலையாகிய வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் 1971 – 1972 வரை கடமையாற்றுகிறார். பின்னர் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியராக 1976 -1978 வரை கடமையாற்றுகிறார்.
உயர்கல்வி நிறுவனம் பணி-
1979 – 1980 வரை பலாலி ஆரசினர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.  1983 – 1989 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பதவியேற்ற மௌனகுரு அவர்கள் 1989  காலப்பகுதியில் சிரேஷ்ட விரிவுரையாளரானார்.  1990ல்  கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையேற்றார்.    1996 தொடக்கம் பேராசிரியராகக் கடமையாற்றினார்.  2008 இல் ஓய்வு பெற்று தொடர்ந்தும் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்.
ஆற்றிய பணிகள்-
தமிழ் பாடநூல் எழுத்தாளராக 1972 – 1973 வரை, 1992 – 2004 வரை கிழக்கு பல்கலைக்கழகத்தில் நூண்கலைத் துறைத் தலைவர்,  1993 – 1999 வரை கலைப்பீடாதிபதி ,  1997ல் உபவேந்தர் வெளிநாடு சென்றபோது உபவேந்தராக பதில் கடமை புரிந்தார்.  2000ம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழக நூலகக் குழு தலைவராகவும், சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி – கிழக்குப் பல்கலைக்கழக இணைப்பாளராக 2003ல் இருந்து ஓய்வு பெறும் வரை கடமையாற்றினார்.
கலை இலக்கியப் பணி-
1971 இல் இருந்து இன்று வரை 200-க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார் . சிறந்த நடிகர், நாடக எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், கவிஞர், நூலாசிரியர், நாவலாசிரியர், ஆய்வாளர், விமர்சகர். இவர் நடித்து நெறியாள்கை செய்த நாடகங்களின் எண்ணிக்கை  1948ல்  பெரிய வைத்தியர் நாடகம் முதல் வனவாசத்தின் பின் வரை 73 ஆகும். இதில் சிறுவர் நாடகங்கள், வளர்ந்தோர் நாடகங்கள், பரிசோதனை முயற்சிகள், கிழக்கு இசை, இன்னிய அணி, கிழக்கு நடனம், வடமொடி ஆட்ட அறிமுகம், மேளப்பேச்சு, நாட்டார் இசை என்பன அடங்கும்.
நாடகங்கள்-
இவர் எழுதிய நாடகங்கள் 15 ஆகும். வாலி வதை, இராவணேசன். இவையிரண்டும் பேராசிரியர் வித்தியானந்தனுக்காக இவரால் எழுதப்பட்டவை. சங்காரம், யாருக்குச் சொந்தம், கும்பகர்ணன், சக்தி பிறக்குது, விடிவு,  சரிபாதி, நம்மைப் பிடித்த பிசாசுகள், தப்பி வந்த  தாடி ஆடு, வேடரை உச்சியை வெள்ளைப் புறாக்கள்,  உயிர்ப்பு. பறபாஸ்,  ஓர் உண்மை மனிதன் கதை, வனவாசத்தின் பின் என்பவை ஆகும்.
சாஹித்திய பரிசு பெற்ற நூல்கள்-
சிறுவர் நாடகம் 1989 -தப்பி வந்த தாடி ஆடு, 1992 – பழையதும் புதியதும் , 1993 ஈழத்து தமிழ் அரங்கு, 1998ல் மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள். சிறந்த ஆராய்ச்சி நூல்கலுக்கான பரிசு பழையதும் புதியதும், வடக்கு கிழக்கு மாகாண சாஹித்திய பரிசு 1999இலும், மௌனகுருவின் 3 நாடகங்கள் யாழ்மாவட்ட சிறந்த நாடகத்திற்கான பரிசு,  ஈழத்து தமிழ் நாடக அரங்கு  1993 கொழும்பு தமிழ் சங்கத்தாலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் 1959 இல் ‘பாசுபதம்’ நாடகத்தில் ‘சிவவேடன்” பாத்திரமேற்று ஆடியதன் மூலம் அந்த ஆட்ட முறையின் ஈர்ப்பால் ஆகர்சிக்கப்பட்ட பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவரது கூத்தின் மீள்உருவாக்கப் பணியில் பல முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்தார். கர்ணன் போரில் (கர்ணன் -வடமோடி) இராவணேசன் (இராவணன் -வடமோடி) நொண்டி நாடகத்தில் (செட்டி -தென்மோடி) குறிப்பிடத்தக்கது.
மேலும் கூத்து நூல்களைச் சுருக்கி வடிவமைத்தல், மாணவருக்கு கூத்தாட்டம் பழக்குதல், அண்ணாவிமார்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், ஆடைகளை வடிவமைப்பு முதலான பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சமூக அரசியல் ஈடுபாடு-
பாடசாலை நாட்களில் வந்தாறுமூலை மத்திய கல்லூரி வகுப்பறைத் தலைவர், விடுதித் தலைவர், விபுலானந்தா இல்ல விளையாட்டு தலைவர், பாடசாலை மாணவத் தலைவர்,  தமிழ் மன்றத் தலைவர், இளைஞர் மன்றத்தலைவர், விடுதி உணவு பகுதிப் பொறுப்பாளர், சாரண இயக்கத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் முதலான விளையாட்டுகளில் சிறந்த வீரர். பாடசாலை நாட்களில் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு காரணமாக அரசியலில் பெரும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர். அக்கால கட்டத்தில் நிகழ்ந்த (மறுமலர்ச்சிக் கலைக்கூடம்) சத்தியாக்கிரகப் போராட்டம், சட்ட மறுப்புப் போராட்டம் முதலியவற்றில் பாடுபட்டவர். வந்தாறுமூலையில் இருந்து 2000 மாணவர்களைத் திரட்டி மட்டக்களப்பு கச்சேரிக்கு ஊர்வலமாக அழைத்து வந்தவர். இதற்காக கல்லூரி நிர்வாகத்தால் தண்டிக்கப்பட்டவர். சட்ட மறுப்புப் போராட்டங்களை நடத்திய மட்டக்களப்பு தமிழ் மாணவர் மன்றத் தலைவராக இருந்து செயல்பட்டவர். தமிழ் உணர்வூட்டும்  “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் ”  இயக்கத்தின் உறுப்பினராகவும் செயறபட்டவர். இவ் இயக்கம்  ஊர் ஊராகச் சென்று பாடல்களால் உணர்வு ஊட்டியது. கவிஞர் காசியானந்தன், அமரர் ஆரையூர் அமரன், வித்துவான் ச.இ.கமலநாதன் என அன்றைய நீண்ட புரட்சிகர இளைஞர் கூட்டத்தில் இவரும் ஒருவர். மேலும் பேராதனை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட பட்டப்பகலில் பாவலருக்கு தோன்றுவது என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் இவர் ஈழத்தமிழர் தனிநாடு பெற்று படைகொண்டு புலிக்கொடியுடன் வாழ்வதாக கனவு கண்டிருந்தார். இக்கவிதைக்கு முதற்பரிசு இவருக்கு  கிடைத்தது. சிறுகதைப்போட்டியில் “சலனம்” என்ற சிறுகதைக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. தேசிய சிந்தனையுடன் செயற்பட்ட இவர் பின்னாளில் இடதுசாரிக் கொள்கையின் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டு தனது சிந்தனைகளை அதன்பால் அகலித்துக் கொண்டார் எனலாம்.
ஆசிரியர் மாணவர் உறவு-
ஈழத்து தமிழ் நாடக வரலாற்றின் பின்புலம் வித்தியானந்தன் என்ற புலமையினதும் நிர்வாகத்தினதும் வழிகாட்டலில் பேராசிரியர் சிவத்தம்பி , கைலாசபதி வழியில் மௌனகுருவின் கூட்டுழைப்பின் பயனாய் முகிழ்த்தது. இந்த முகிழ்விப்பு இன்று பல்வேறு கட்டங்களைக் கடந்து ஈழத்தமிழ் தேசிய வடிவமாக  கூத்தரங்கு மிளிர்கிறது.
இவர் பாதையில் இவரது மாணவர்களான கலாநிதி சிதம்பரநாதன்,  கலாநிதி பாலசுகுமார், கலாநிதி ஜெயசங்கர், கலாநிதி பிறிம்ராஜ் ரவிச்சந்திரா (இக்கட்டுரை ஆசிரியர்) கலாநிதி இன்பமோகன், கலாநிதி சிவரெத்தினம், ரவீந்திரன் , மோகனதாசன் என ஒரு பரம்பரை நீண்டு செல்கிறது. இச்சாதனையை அடைவதற்கு பல்வேறு தியாகங்களை இவர்கள் செய்யவேண்டியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம். இத்தகைய நுண்மான் நுழைபுலம் கொண்ட அறிஞர் பெருமகன் தமது 77 வது அகவையை நிறைவு செய்கிறார். அகம் மகிழ உடல் வளம் பெற,  தங்கள் கலைப்பணி தொடர்ந்து வளமுடன் சிறக்க தங்கள் மாணவர்கள் சார்பில் பேருவகையுடன் இப்படையலைச் சமர்ப்பணம் செய்கிறேன். ஓய்விலும் ஓய்வில்லாது கலைப்பணியை, கொரோனா காலத்திலும் முக நூல் ஊடாக செவ்விதப்படுத்திய சிறப்பான முயற்சிக்கும் இம்முயற்சி மேலும் வளமும் சிறக்க பலம்பெற கலை உலகு சார்பாகத் தங்களை வாழ்த்துகிறோம்.

கலாநிதி எம் பி ரவிச்சந்திரா,
கல்வியியலாளர்,
அரசினர் ஆசிரியர் கலாசாலை, மட்டக்களப்பு.