தமிழ்யுவதிகளின் ஏழ்மையை பகடைக்காயாக்காதீர்கள்! ஏமாற்றி அவமானப்படுத்தியமை கண்டனத்துக்குரியது!!

இத்தோடு நிறுத்துங்கள் என்கிறார் தவிசாளர் ஜெயசிறில்!
(காரைதீவு  நிருபர் சகா)

உங்களின் அரசியலுக்காக ஏழை அப்பாவி தமிழ் யுவதிகளின் வாழ்க்கையில் விளையாடியுள்ளீர்கள். அவர்களின் ஏழ்மையை பகடைக்காயாகப் பயன்படுத்தி அவமானப்படுத்தியுள்ளீர்கள். இத்தோடு நிறுத்துங்கள்.

இவ்வாறு திராய்க்கேணி தமிழ்யுவதிகளுக்கு நடந்த அவமானத்தை நேரில் விசாரித்தறிந்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் தெரிவித்தார்.

தவிசாளர் கே.ஜெயசிறில் மேலும்  கருத்துரைக்கையில்:

இவர்கள் இருவரும் முஸ்லிம் காங்கிரசுக்கு மாறவில்லை. ஆனால் இவர்களிருவரும் மு.காவிற்கு மாறியுள்ளதாக பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் முகநூலில் செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தன. இது அப்பட்டமான பொய்யான செய்தியாகும்.
இவர்களுக்கு உலருணவுப்பொதிகள் தருவதாகக்கூறி அழைத்து ஏமாற்றி ஒருபைலைக்கொடுத்து படம்எடுத்திருக்கிறார்கள். அதை ஏன் என இவர்கள் கேட்டதற்கு உலருணவு வழங்கியமைக்கு சான்று என அவர்கள் பொய் கூறியுள்ளனர்.

ஒரு மாதகாலமாகியும் அந்த உலருணவை அவர்கள் வழங்கவில்லை.

மாறாக இவர்களின் வறுமை நிலையைப்பயன்படுத்தி இவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு மாறியதாக முன்னாள் அமைச்சர் பைசால்காசிம் கூறியதாக ஊடகச்செய்தி வந்திருந்தது.
உண்மையில் அசசெய்தியைப்பார்த்ததும் தமிழ்உணர்வாளர்கள் தமிழ்அரசியல்வாதிகள் கொந்தளித்தார்கள். பலர் தொலைபேசியூடாகவும் நேரில்வந்தும் என்னைக்கேட்டிருந்தார்கள்.
இன்றையநிலையில் இவர்கள் அவமானப்படுத்தபட்டநிலையில் முகநூலில் பல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் இவர்கள் மாறவில்லை. இவர்களின் ஏழ்மையைப்பயன்படுத்தி பகடைக்காயாக மாற்றியுள்ளனர்.

அரசியலுக்காக எமது தமிழ்மக்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். கேவலப்படுத்துகிறார்கள். கடந்தகாலங்களில் எமது நிலங்களை அபகரித்தார்கள். கலாசாரங்களை அடையாளங்களை அழித்தார்கள். இப்போது பார்த்தால் மக்களையே பிழையாக மாற்றிகையாளுகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை நீங்கள் நிறுத்தவேண்டும். நிச்சயமாக சகோதார இஸ்லாமிய இனத்தவர்கள் அனைவரையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் இவ்வாறு ஒருசிலர் செய்கின்ற இவ் ஈனச்செயல்களால் முழுஇனத்திற்குமே அவமானமாகும்.
எமது இனம் பேரினாலும் வன்செயலினாலும் பாதிக்கப்பட்டு சொல்லொணாத்துன்பதுயரங்களில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் இந்த அப்பாவி யுவதிகளை அவமானப்படுத்தி தற்கொலை முயற்சிக்கு தள்ளப்படுவதற்கு ஆளாக்கியுள்ளீர்கள். உங்களுக்கு ஆண்டவன் நல்ல தண்டனை தருவான். எனவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இந்த ஏழை யுவதிகளை அவமானப்படுத்தியுள்ளீர்கள். அவர்களது விருப்பையறியாமல் காட்டுமிராண்டித்தனமாக அப்பட்டமான பொய்யை ஊடகத்திற்கு வழங்கியுள்ளீர்கள்.

இன்று முகநூலில் எம்மவர் உண்மையையறியாது கிழி கிழியென கிழிக்கிறார்கள். உங்கள் பணபலம் அரசியல் பலத்தை இந்த ஏழை யுவதிகளிடம் காட்டாதீர்கள்.
இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இவ்விடயத்தை தமிழ்உணர்வாளர்களிடம் விடுகின்றேன். இதற்குரிய சட்டநடவடிக்கையை கட்சி கட்டாயம்  முன்னெடுக்கவேண்டும். என்றார்.