தமிழின தமிழ் பிரதேச பாரம்பரியத்துக்கு எதிரான நேரடியான தாக்குதலாகவே தொல்பொருள் விவகார செயலணி – ஜனா

இலங்கையின் பன்மைத்துவத்துவத்துக்கு விடுக்கப்பட்ட , தமிழின தமிழ் பிரதேச பாரம்பரியத்துக்கு எதிரான நேரடியான தாக்குதலாகவே தொல்பொருள் விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி அமைந்துள்ளது.  தமிழ் இனத்திற்கெதிராக புரியப்படும் மற்றொரு மறைமுக யுத்தமாக ஜனாதிபதி இதை கருதுகின்றார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் விவகாரங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி குறித்து  திங்கட்கிழமை (08.06.2020) வெளியிட:டள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொல்லியலும் தொல்பொருளும் நாட்டின் தேசிய அடையாளங்கள் .மரபுருமைச் சொத்துக்கள்.அவை ஆய்வு செய்யும்போதும் பாதுகாக்கப்படும்போதும் காய்தல் உவத்தல் அற்ற நடுநிலை சார்ந்த அறிஞர் பெருமக்கள் அதன் செயற்பாட்டில் பங்குபற்ற வேண்டும் . மாறாக ஏதோ தமிழ் இனத்திற்கெதிராக புரியப்படும் மற்றொரு மறைமுக யுத்தமாக ஜனாதிபதி இதை கருதுகின்றார் அவரால் நியமிக்கப்பட்ட செயலணிக்குழு உறுப்பினர்களை நோக்கும்போது ஜனாதிபதி ஒரு யுத்த மனோபாவத்தில்தான் இருப்பது போல் தான் தெரிகின்றது.

தொல்பொருளும் தொல்பியலும் யுத்தம் சார்ந்த தடயங்கள் அல்ல அதே போல பெளத்த பிக்குகள் சார்ந்த விடயமும் அல்ல . இலங்கையின் பன்மைத்துவத்துவத்துக்கு விடுக்கப்பட்ட ,தமிழின தமிழ் பிரதேச பாரம்பரியத்துக்கு எதிரான நேரடியான தாக்குதலாகவே இச்செயலணி அமைந்துள்ளது அமைக்கப்பட்டும் உள்ளது.

இது தேர்தல் பரப்புரைக்கான விடயமல்ல தமிழர்தம் இருப்பினை பாதிக்கும் விடயம். இதனால் கிழக்கு வாழ் தமிழினம் இனமத அரசியல் வேறுபாடு மறந்து இதன் நோக்கை முளையிலேயே கிள்ளியெறிய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுமனே உணர்ச்சி வசமான கோசங்கள், அனாவசியமான உரைகளுடன் வழமைபோல மட்டுப்படுத்தி நிறுத்திவிடாது அனைவரும் இணைந்து இது தொடர்பான துறைசார் நிபுணர்கள்,கல்வியாளர்கள், பண்பாட்டாய்வாளர்கள் போன்றவர்களின் பங்களிப்புடன் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசரமும் அவசியமும்.

இல்லையெனில் இதிலும் அரசியல் லாபம் பெற முயல்வோமானால் மொழியில்லை, இனமில்லை, நிலமில்லை, பண்பாடில்லை, வரலாறில்லை, மரபுரிமையில்லை, எமக்கென்று ஒரு சாசனம் இல்லை, எம்மினம் ஒரு வந்தேறு குடிகள், வரலாற்ற்றவர்கள் என்ற வகையில் பெளத்த சிங்கள பேரினவாதம் தனது புதிய மகாவம்சத்தில் எமது வரலாற்றை பதிவுசெய்யும்.

இதன் உண்மைத்தன்மையை, இதன் பாரதூரத்தை, இதன் பின்னணியை உணர்வோம். இச்செயலணி எம்மினம் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை தடுத்து நிறுத்துவோம். இதற்கான ஒரு செயலணியாய் ஒருங்கிணைந்து எமது தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம். இது காலத்தின் கட்டாயம். இல்லையெனில் வரலாற்றில் மீண்டும் தோற்கடிக்கப்பட்ட ஒரு இனமாகவே எம்மினம் கருதப்படும்.