உலகனைத்திற்கும் ஓர் தாய் மடியாம் புவி – இயற்கையை காப்போம்…!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – ஜுன் 5

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினம். 1972இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது.  முடிவில் ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றுச் சூழல் (World Environment Day) தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. 2020ம் ஆண்டின் தொணிப்பொருளாக எமது புவியில் காணப்படும் உயிர்ப்பல்வைமையை உள்ளார்ந்த அடிப்படையிலும் மிக தீவிரமாகவும் பாதுகாத்தல் வேண்டும். தற்போது உலகில் ஏற்பட்டுள்ள Covid -19ன் தோற்றமானது எமது சூழலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக கைத்தொழிற்சலைகளின் பயன்பாடு வெகுவாக குறைவடைந்துள்ளது. அத்துடன் ஆய்வு நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் இந்த ஊரடங்கு காலப்பகுதியில் காட்டு விலங்குகள் கூட உள்நாட்டுப்பகுதியில் சுதந்திரமாக வலம் வருவதை அவானிக்க கூடியதாக இருந்தது. ஆரம்ப காலங்களில் சூழல் தான் மனிதனை கட்டுப்படுத்தியது. ஆனால் துரதிஷ்ட வசமாக மனிதன் சூழலை தனது சுய நோக்கத்திற்காக பயன்படுத்தும் நிலைமை மாறியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இறுதியில் விளைவுகள் அனைத்தும் மனிதனுக்கே வந்து சேரும் என்பதில் சந்தேகமே இல்லை.

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்தாக அமைகிறது. சுற்றுச் சூழலை மனிதன் பாதூக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்ல.

சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. ஒருபுறத்தில் வரட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமையும் சூறாவளியும் என்று இயற்கையின் அனர்த்தங்கள் சுழற்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. மேற்குலகில் சூழலியல் அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் பெற்று பாராளுமன்ற ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும் பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்று இன்னும் கூட பலர் நினைக்கிறார்களோ என்று வியக்கவேண்டியிருக்கிறது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக பிறந்த சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. சுற்றுசூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது மனிதன் உணர்ந்து கருமத்தை ஆற்ற வேண்டியதும் முக்கியமானதாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஓட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும். மேலும் சுற்றுச் சூழல் தொடர்பாக காலநிலை மாற்றம், புவிக்கோளம் உஸ்ணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீர் வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்திரமாக்கல், உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக அண்மைய சில ஆண்டுகளாக சுற்றுச் சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு உணர்வு காணப்படுகின்ற போதிலும், அரசியல் தலைமைத்துவங்கள் இதுவிடயத்தில் போதியளவு அக்கறை காண்பிக்காததால் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று நாம் சில உறுதிமொழிகளை எடுப்பது அவசியமானது. சொர்க்கமாக இருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாக நரகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் வேறு யாரும் அல்ல மனிதர்களாகிய நாம் தான். நாம் என்ன செய்தோம் என்று மட்டும் கேட்காதீர்கள். பூமியை பற்றி கவலை இல்லாமல் மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டுவது, வாகனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து மண்டலம் மண்டலமாக புகையை வெளியேற்றி ஒசோன் படலத்தை கெடுப்பது என பல காரியங்களை செய்து பூமியை அழித்துக் கொண்டிருக்கும் பெருமை மனிதர்களையே சேரும். ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் தினத்தன்று மட்டும் சுற்றுச்சூழலை எப்படி பாதுகாப்பது, மரங்கள் நடுவது பற்றி பேசினால் போதாது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா அதனால் என்ன என்ற அலட்சியத்தை முதலில் நாம் கைவிட வேண்டும்.

எதிர்கால சந்ததியினரையும், பூமியையும் காக்க வேண்டுமென்றால் பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லும் போது துணிப் பைகளையே எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவில்லையெனில், கடல் வளமும், நில வளமும், நீர் வளமும் முற்றிலும் அழிந்து விடும்.குழந்தைகளுக்கும் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காற்று மாசடைந்த போதும் நாம் சுவாசிப்பதை நிறுத்த முடியாது, ஆனாலும் நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். சூழலை பாதுகாப்பவர்களாக எம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

வி.பிரசாந்தன்

தலவாக்கலை.