ஆரவாரத்துடன் நடைபெற்ற கண்ணகியம்மன் சடங்கு அமைதியாய் நடந்தேறுகிறது.

(படுவான் பாலகன்) இலங்கை நாட்டில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு பிரதானமாக வழிபடப்படுகின்றது. மாவட்டத்தில் கண்ணகிக்கென பல கோயில்கள் பல்வேறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வைகாசி மாதம் பிறந்தாலே கண்ணகி சடங்கின் முணுமுணுப்பு ஆரம்பித்துவிடும். வருடந்தோறும் இச்சடங்கினை ஊர் தேசம் கூடி பெருவிழாவாக நடத்துவதற்குரிய திட்டமிடல்கள் பல நாட்களுக்கு முன்னமே ஆரம்பித்துவிடும். எத்தனை நாட்கள் சடங்கினை செய்வது, சடங்கினை சிறப்பிப்பதற்கு எவ்வகையான அலங்காரங்களை மேற்கொள்வது, ஒவ்வொரு நாட்களும் என்ன? என்ன? நிகழ்வுகளை நடாத்துவதென திட்டமிடப்பட்டு, சடங்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரங்களுக்கு முன்னமே பிரசுரங்களும் வெளியாகிவிடும். இச்சடங்கினை காண்பதற்காக அவ்வூரினை, தேசத்தினைச் சேர்ந்த மக்கள் எங்கு இருந்தாலும், தத்தமது ஊர்களுக்கு வருகைதந்து சடங்கில் கலந்துகொள்வது வழக்கம். இதனால் நீண்ட நாட்கள் சந்திக்காதவர்களும், இச்சடங்கின் மூலமாக சந்திப்பதும், தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதும் நடந்தேறும். சடங்கு ஆரம்பித்தால், அச்சடங்கு முடியும் வரை தத்தமது ஊர்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதையும் தவிர்த்துக்கொள்வதுடன், பல்வேறு சம்பிராதயங்களையும் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவர்.

சிறுவர்கள் தமக்கு விருப்பமான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும். எப்போது சடங்கு நடைபெறும் என எதிர்பார்த்து காத்திருப்பர். சிறுசிறு நடமாடும் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், கடைகளை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வர். சடங்கோடு மட்டும் நின்றுவிடாது, மக்களுக்கு அன்னதானம் கொடுக்கும் வழக்கமும் இடம்பெறும். இவையனைத்தின் மூலமாகவும் பலரும் ஒன்றுசேரும் வாய்ப்பும், வேலைகளை பகிர்ந்து செய்வதும் வழக்கமாகிடும். மேலும் ஆலயத்தில் பாடப்படும் பாடல்கள் கேட்போர் காதுகளில் தேனைப் பாய்ச்சும்: ஊரே செழிப்புற்றிருக்கும்: வண்ணவடிவ மின்குமிழ்கள் ஒளிரும் காட்சியும் கண்ணுக்கு விருந்தளிக்கும். நிகழ்வுகள் மூலமாக பலரின் திறமைகள் வெளிவரும். இவ்வாறாக பலரையும் ஒன்று சேர்த்து கோலாகலமாக நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கானது, தற்போதைய நாட்டின் அசாதாரண சூழலினால் மிக அமைதியாக நடைபெறுகின்றது. நிகழ்வுகள் இல்லை, கடைகள் இல்லை, மக்கள் கூட்டம் இல்லை, அலங்காரம் மிகக்குறைவு, மின்குமிழ்களும் மிகக்குறைவு, பட்டாசு சத்தம் இல்லை. ஆனால் சடங்கானது ஊர்மக்களின் காவலுக்காக தற்கால சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்தேறுகின்றமை வரலாற்றில் முதல் தடவை என்றே கூறவண்டும்.