மாதவணை , மயிலத்தமடு பிரதேசங்களில் எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வதிவிடத் திட்ட முகாமையாளர் டபிள்யூ.எம்.சுகத் வீரசிங்க

மட்டக்களப்பு மாவட்டப் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையாக விளங்கும் மாவட்டத்தின் எல்லைப்புறப் பிரதேசங்களான மாதவணை மற்றும் மயிலத்தமடு பிரதேசங்களில் எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது என  மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வதிவிடத் திட்ட முகாமையாளர் டபிள்யூ.எம்.சுகத் வீரசிங்க தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும்  கிழக்குமாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் வதிவிட திட்டமுகாமையாளரைசந்தித்து அத்துமீறல் சம்பந்தமாக எடுத்துரைத்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சந்திப்பு தொடர்பாக துரைராஜசிங்கம்  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நேற்றுமுன்தினம்  (02) வெலிகந்தையில் அமைந்துள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் வதிவிடத் திட்ட முகாமையாளரைச் சந்திக்க அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு வதிவிடத் திட்ட முகாமையாளர் டபிள்யூ.எம்.சுகத் வீரசிங்க அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன்.

கலந்துரையாடலின் தொடக்கத்திலே வதிவிடத் திட்ட முகாமையாளர் “அத்துமீறுவோர் சிங்கள மக்கள் தானே” என்று ஆரம்பித்தார்.  அதற்கு நான் “இத்தகைய பதப் பிரயோகங்கள் தான் நமது நாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. எனது முறைப்பாடு, வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிக் குடியேற முயற்சிக்கின்றார்கள் என்பதேயாகும். நாமெல்லோரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலும், இலங்கையர் எல்லோர் தொடர்பிலும் சட்டங்கள் பாராபட்சமின்றிப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இந்த விடயம் பார்க்கப்பட வேண்டும்” என்று கலந்தரையாடலை ஆரம்பித்தேன்.

இத்தகைய ஆரம்பம் வதிவிடத் திட்ட முகாமையாளருடைய நடவடிக்கைகளில் திடீரென ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் அடிப்படையில் அவர் மகாவலி(டீ) வலயம் தொடர்பில் ஆவனப்படுத்தப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து மாதவணை தொடர்பான குறித்த பக்கத்தை விரித்து வைத்துக் கொண்டு கலந்துரையாடலைத் தொடங்கினார். கலந்துரையாடல் மிகவும் சிநேகபூர்வமாக இடம்பெற்றது.

மேலே குறிப்பிட்ட விடயங்கள் வதிவிடத் திட்ட முகாமையாளருக்கு விபரிக்கப்பட்டன. இவற்றைக் குறித்த அதிகாரி கவனமாகக் கிரகித்துக் கொண்டார். இறுதியாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பாதுகாப்புப் பிரிவினரைக் குறித்த இடத்திற்கு அனுப்புவதாகவும், ஆரம்ப விசாரணைகளை உடினடியாகவே ஆரம்பிக்க இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எவ்விதத்திலும் அத்துமீறலுக்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்ததோடு, இது தொடர்பான முன்னேற்றங்களை என்னோடு பகிர்ந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணசபை 2017 செப்டெம்பரில் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்துமீறல் செய்வோரின் நடவடிக்கைகள் மீண்டும் அடிக்கடி நிகழ்ந்தன. இருப்பினும், சென்ற மாதம் தொடக்கம் இவர்களுடைய நடவடிக்கைகள் மிக மோசமாக அதிகரித்திருந்தன. இது தொடர்பில் மாவட்ட செயலகம் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகம் என்பவற்றைத் தொடர்பு கொண்டு கதைத்ததன் பேரிலும் குறித்த இந்த இரண்டு செயலகங்களுக்கும் பண்ணையாளர்கள் எனது வழிநடத்தலில் மேற்கொண்ட முறைப்பாடுகளுக்கு இணங்கவும் குறித்த சில நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. இருப்பினும், அத்துமீறிறுவோரின் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என மேலும் தெரிவித்தார்.