றிஸ்லியின் வேண்டுகோளை ஏற்று அம்பாறை மாவட்டத்துக்கு வருகின்றார் நாமல் ராஜபக்ஸ இளையோர்களை சந்தித்து பேச ஏற்பாடு!

பீ.எம்.றியாத்
வருகின்ற பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தமிழ் பேசும் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இம்மாவட்டத்துக்கு அடுத்த வாரங்களில் விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

நாளைய இளைஞர்கள் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஸவின் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் றிஸ்லி முஸ்தபா. நாடளாவிய ரீதியில் இளையோர்களை இலக்கு வைத்து நாமல் ராஜபக்ஸவால் எழுச்சியை நோக்கி இளையோர்கள் என்கிற வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொழில் பயிற்சி, தொழில் கல்வி, தலைமைத்துவ பயிற்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சுய தொழில் ஊக்குவிப்பு, விளையாட்டு, சர்வதேச உறவுகள் என்று பரந்து பட்ட துறைகளில் இளையோர்களை எழுச்சி அடைய வைக்க வேண்டும் என்பதே இவ்வேலை திட்டத்தின் இலக்கு ஆகும்.
இந்நிலையில் இவ்வேலை திட்டத்தின் நன்மைகள் அம்பாறை மாவட்டத்தில் பொதுவாக மூவினங்களை குறிப்பாக தமிழ் பேசும் சமூகங்களை சேர்ந்த இளையோர்களுக்கும் கணிசமான அளவில் கிடைக்க வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நாமல் ராஜபக்ஸவை றிஸ்லி முஸ்தபா கோரினார்.
இக்கோரிக்கையை ஏற்று கொண்ட நாமல் ராஜபக்ஸ இவ்வேலை திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் அவருடைய பிரதிநிதியாக இருந்து முன்னெடுப்பதற்கான பொறுப்பாளராக றிஸ்லி முஸ்தபாவையே நியமித்தார்.
இதற்கு அமைய அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளையோர்களை இவ்வேலை திட்டத்துக்கு உள்வாங்குகின்ற முன்னெடுப்புகள், நடவடிக்கைகள் றிஸ்லி முஸ்தபாவால் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மாவட்டத்தை சேர்ந்த ஆயிர கணக்கான இளையோர்கள் இவ்வேலை திட்டத்தில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதில் இணைவதற்கான விண்ணப்ப படிவங்களை றிஸ்லி முஸ்தபாவின் கல்முனை அலுவலகத்தில் இருந்தும், ஒன்லைன் மூலமாகவும் பெற்று கொள்ள கூடியதாக இருக்கின்றது.
அதே நேரத்தில் இவ்வேலை திட்டத்தின் பயனாளிகளாக இருக்க கூடிய அம்பாறை மாவட்ட இளையோர்களை நேரில் சந்தித்து பேசுவதற்காகவே நாமல் ராஜபக்ஸவின் விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நாமல் ராஜபக்ஸ, உயர் கல்வி துறை முன்னாள் பிரதி அமைச்சரும், றிஸ்லி முஸ்தபாவின் தந்தையுமான மயோன் முஸ்தபா ஆகியோரின் கூட்டு தலைமையில் இளையோர் மாநாடுகள் இங்கு இடம்பெற உள்ளன.