சர்ச்சைக்குரிய கல்முனை வடக்குபிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி!

(காரைதீவு  நிருபர் சகா)
 

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு  இன்று நேற்று(2) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்ய விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி த.கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

 
இவ்வழக்கிற்கென மட்டக்களப்பிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்ட மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரன் காலை 9.30மணியளவில் மன்றுக்கு வந்ததும் முதல் வழக்காக சர்ச்சைக்குரிய வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் குறிப்பிடப்பட்ட  திகதிகளில்   முரண்பாடு காணப்பட்டதனாலும் ஆலயம் அமைப்பதற்கான முறைப்படியான கடிதப்போக்குவரத்துகள்  நடைமுறையில்  இருக்கின்றதனாலும் இவ்வழக்கு குறைபாடுள்ளதாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டது.

வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது என அறிவித்துவிட்டு நீதிவான் இறங்கியதும் மன்று கலைகிறது எனக்கூறப்பட்டது. பின்னர் வழமையான நீதிபதியுடன் மன்று மீண்டும் கூடியது குறிப்பிடத்தக்கது. 


நேற்று(2) ஆலயம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிவரஞ்சித் மற்றும் சட்டத்தரணி  தெய்வநாயகம் மதிவதனன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்தார்.

இவ்வாலய வழக்கில் பிரதான சட்டத்தரணி ந.சிவரஞ்சித்துடன், சட்டத்தரணி 
திருமதி சிவதர்சன் ஆர்த்திகா எஸ்.மதிவதனன் ஆகியோர்  பல  வழக்குகளில் ஆஜராயிருந்தார்கள்.

பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்
ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் வழக்கு தாக்கல் செய்திருந்தார் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றுவந்திருந்தது.

என்ன நடந்தது? வழக்குவிபரம் இதோ..

கல்முனை தமிழ் பிரதேச செயலக வளாகத்திலமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தை அகற்றவேண்டுமென கல்முனை மாநகரசபை மேயர் எ.எம்.றக்கீப் கல்முனை நீதிமன்றில் 2018.10.30ல் தானே வழக்குத் தொடர்ந்திருந்தார்.

சட்டரீதியாக நகரஅபிவிருத்தி பிரிவில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் அது எனவே அதனை இடிக்கவேண்டும் என அவரே வழக்கு தாக்கல்செய்திருந்தார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படாமல் கட்டப்படுகின்ற சட்டவிரோத கட்டிடம் இது என்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கையளித்து உள்ள அதிகாரத்தின்படி இக்கட்டிடத்தை இடிக்க கோருகின்ற உரிமை அவருக்கு உள்ளது என்றும் முதல்வர் றஹீப் சார்பாக நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இவரின் சமர்ப்பணம் கல்முனை மேலதிக நீதிவான் பயாஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இச்சட்டவிரோத கட்டிடத்தின் நிர்மாணத்தை ஆட்சேபித்து இவரால் அனுப்பப்பட்ட இரு கடிதங்களுக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலாளரால் பதில் விளக்கம் தரப்படாத நிலையிலேயே நீதிமன்றத்தை நாடி வந்து உள்ளார் என்றும் சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான ஆவணங்களை 14 நாட்களுக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்..

இக்கட்டிடம் ஏன் இடிக்கப்பட கூடாது? என்று ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க தமிழ் பிரிவு பிரதேச செயலாளருக்கு இரு வார கால அவகாசம் வழங்குவதாக அறிவித்துதமிழ் பிரதேச செயலாளர் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கல்முனை மாநகர முதல்வரை ஆதரித்து சட்டத்தரணிகளான ரொஷான் அத்தார் முஹைமீன் காலித்  அன்ஸார் மௌலானா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
அதனையடுத்து பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்குச்சென்று சட்டமா அதிபருக்கு தெரிவித்து வழக்கிற்கான பதில் சமர்ப்பணத்தை சிரேஸ்ட அரச சட்டத்தரணியுடன் கலந்துரையாடி   வழக்கு தொடர்பாக அரசதரப்பு விளக்கங்களை பெற்றிருந்தார்.

இந்த ஆலய விவகாரம்  அப்போது  இப்பிரதேச தமிழ் மக்களிடம் கடும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியிருந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனியான நிருவாகம் ஆளணி முகாமைத்துவம் நிருவாக எல்லைகளுடன் இயங்குகின்றபோதும் இதனை தரமுயர்த்தவிடாது கடந்த 30 வருடங்களாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி தடுத்துவருகின்ற அதே வேளை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஊழியர்களால் வழிபட்டுவரும் வணக்க தலத்தை அகற்றுவதற்கு தற்போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகரசபை மேயர் வழக்கு தாக்கல் செய்துள்ளமையும்  அன்று பரவலாக  வேறொரு கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டுவந்தது.

சுமார் ஒன்றரை வருடகாலத்தின்பின்னர் அந்த சர்ச்சைக்குரிய வழக்கின் தீர்ப்பு நேற்று (2) வழங்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது