கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள் – 31.05.2020

கேதீஸ்-

உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி யோகி ( காசிப்பிள்ளை சாமியார்) அவர்களின் ஜனன தினம் இன்றாகும்.

கல்முனையின் கருவறையாம் பாண்டிருப்பில் 1912 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 31 ஆம் திகதி இளையதம்பிக்கும் பெரியபிள்ளைக்கும் மகனாக பிறந்தார்.இவருக்கு பெற்றோர்கள் சூட்டிய பெயர் காசிப்பிள்ளை சிறுவயதில் தந்தையை இழந்ததால் குடும்ப பொறுப்பை தான் சுமந்து வந்தார்.

12 – 15 வயதுகளில் ரெனிஸ் கிளப்பிலும் பின்னர் பிரித்தானியா கடற்படையிலும் வேலை செய்து வந்தார் இவ்வாறான காலப்பகுதியில் மலையாள நாட்டவரின் உதவியுடன் மல்யுத்தம் சிலம்படி யோகம் போன்ற பயிற்சிகளை பயில இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மல்யுத்தம் சிலம்படி கலைகளை திறமையாக பயின்றுவரும் காலப்பகுதியில் இவரின் முழங்காலில் முறிவு ஏற்பட்டது இதனால் தொடர்ந்து இக் கலைகளை பயில்வதை நிறுத்தினார்.

இந்த மாற்றத்தின் பின்பும் சிதானந்த யோகி அவர்களின் ஆன்மிகப் பாதை தொடர்பாக பார்ப்போம்.
இந்த காலத்தில் மலையாள சகோதரர்களின் உதவி யோகக்கலை பயில கிடைக்காவிட்டாலும் சுவாமியின் முயற்சியால் பெங்களுர் சுதந்திரத்திற்கு கடிதம் அனுப்பி ஆனந்த இரகசியம் எனும் யோகப்புத்தகத்தை பெற்றுக்கொண்டார். யோகி சுதந்திரத்தை குருவாக வைத்து யோக ஆசனங்களை பழகினார் மலையாள சகோதரர்களுக்கு யோகாசனங்களை செய்து காட்டினார் இதனை பார்த்த மலையாள சகோதரர்கள் இவரை பாராட்டி பிரணாயாமத்தின் மேற்படிகளை பயில ”ஜீவப் பிரமைக்கிய வேதாந்த இரகசியம்” எனும் நூலை பெறுவதற்குரிய முகவரியை கொடுத்தார்கள் அதன் பயனாக நூலையும் பெற்றுக்கொண்டார்.

ஏகலைவனைப்போல் கடப்பைசித்தரை குருவாக வைத்து பிரணாயாமத்தின் மேற்படிகளைப் பயின்றார் அதில் வெற்றிகொண்டார். ஆசனங்களை குறைத்து பிரணாயாமத்தில் அதிக கவனம் செலுத்தினார்.
ஒரு நாள் கும்ப பயிற்றி செய்யும் பொது மயங்கி விழுந்தார் இதனால் குடும்பத்தார் இதனை செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளார்கள் குடும்பத்தாரின் வலயுறுத்தலால் இல்லற வாழ்வில் இணைய சம்மதித்தார் அவரது குடும் உறவுப்பெண்ணான பாக்கியம் என்பரை மணந்தார் இரு ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண் குழந்தைக்கும் தந்தையானார்.
1957 ஆம் ஆண்டு ஆங்கில கடற்படையில் பணிபுரிந்த தொழில் நிறுத்தப்பட்டது இவரின் தொழில் திறமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அதிகாரிகள் இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்ல கேட்டார்கள் குடும்பத்தாரின் விரும்பத்திற்கமைய அந்த வாய்ப்பை கைவிட்டார்.

பின் தனது சொந்த ஊரான கல்முனை பாண்டிருப்பிற்கு திருகோணமலையில் இருந்து குடும்பத்தாருடன் வந்து சேர்ந்தார். பாண்டிருப்பில் தச்சு கூடம் ஒன்றை அமைத்து பலருக்கு தொழில்வாய்ப்பும் வழங்கி வாழ்க்கையை நகர்த்த தொடங்கினார்.

இந்த காலத்தில் அம்மனின் கனவை கண்ட இவர் பாண்டிருப்பில் மாரியம்மன் ஆலயத்தை அமைக்க வித்திட்டார் இங்கு தூக்கு காவடியையும் சடங்கில் செய்தார் தனக்கு முதுகில் முற்கள் குத்தி துலாவில் தூக்குகாவடி எடுத்துதார் ஆலயத்தில் பக்தி பரவசமாக பக்தர்களும் அலைமோதியது இன்றும் பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் துலாக்காவடி சிறப்புற திகழ்கிறது.

இவ்வாறு தனது வாழ்வை நகர்த்துகையில் தனது மகனுக்கு 25 வயதாகியதும் குடும்ப பொறுப்பை தனது மகனிம் கொடுத்துவிட்டு தனது ஆன்மிக பாதையில் தீட்சை பெறுவதற்காக இந்தியா சென்றார்.
காசியில் தீர்த்தமாடினார் தனது குருவான ஸ்ரீலஸ்ரீ யோகிஸ்வரர் 1954 ஆம் ஆண்டு சமாதியடைந்த விடயம் தெரியாது பெங்களுருக்கு சென்றார். அறிந்ததும் வேதனைப்பட்டார். ஏகலைவனைப்போல் சுவாமியை குருவாக வைத்து ஆசனம் பயின்றதை ஆசிரமத்தில் விளக்கினார் சுவாமி அவர்களின் விருப்பப்படி சந்நியாசம் தர ஒப்புக்கொண்டார்.

சுவாமியின் காண்டத்தை பார்த்தபோது பல உண்மைகள் வெளிவந்தன தனது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றையும் மறுபிறப்பில் ஒரு பிராமணனாக இருந்து மாரியம்மனை ஆதரித்தார் என்று கூறப்பட்ன.
பின்னர் சிதானந்த யோகி அவர்களுக்கு பெரிய சுவாமிகள் காவியுடை அணிவித்து கிரியைகள் முடித்து ஸ்ரீலஸ்ரீ பசுபலிங் சுவாமிகளால் உபதேசம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து மூன்று மாதங்கள் பயிற்சி முடித்து தனது குருநாதரிடம் இலங்கை செல்ல அனுமதி கேட்டார்.

இவருக்கு சுவாமி ஸ்ரீ சிதானந்த யோகி எனும் பெயர் சூட்டப்பட்டது.
அப்போது ஸ்ரீலஸ்ரீ பசுபலிங்க சுவாமிகள் சிதானந்தா நீ இலங்கை சென்று இந்த யோகத்தை பரப்ப வேண்டும் எனக் கூற சுவாமி அவர்கள் மறுத்தார்.

தான் இல்லறம் விட்டு ஆசனம் பழகி பேரின்ப நிலையை அடைய இங்கு வந்தேன் மீண்டும் நான் அதற்குள் புகவா என வேண்டினார். அதற்கு சிதானந்தா உனக்கு இப்பிறவியிலே அந்தப்பலன் கிடைக்காது நீ இந்த யோகத்தை இலங்கை வாழ் மக்களிடையே பரப்பி அவர்களின் நோய் நொடிகளை போக்குவாயாக எனப்பணித்தார். தன்னுடைய குருநாதரின் ஆணைப்படி இலங்கை திரும்பினார்.

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திலும் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்திலும் ஆரம்ப காலத்தில் யோகக்கலைகளை மக்களுக்கு பயிற்றுவிக்க ஆரம்பித்தார் மாத்தளை சென்ற ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள் இவரின் திறமையை கண்டு வியந்து யாழ்பாணத்துக்கும் வந்து மக்களுக்கு யோகம் கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கககொண்டதற்கிணங்க 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்றடைந்தார்.
பாடசாலை மாணவர்களுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கும் யோகக்கலையை கற்பித்ததார்.

யோகக்கலையை கற்பது பாடத்திட்டத்தில் முறைப்படி சேக்கப்படாது தவிர்க்கப்பட்டதால் இலங்கை மக்கள் யோகத்தை கற்கும் வாய்ப்பை இழந்த துர்ரதிஸ்ட்டத்தையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம்.
யாழ்பாணத்தில் ஆசனங்களை மக்களுக்கு கற்பித்த காலத்தில் சுவாமி ஆசனம் பழக்கிய அமெரிக்க பெண்மணியின் உதவியுடன் இமாலயம் சென்றார். அங்கு தனது குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சிதானந்த சரஸ்வதியை சந்தித்தார் கிருஸ்ண ஜெயந்தி தினத்தில் சுவாமிக்கு ஞான தீட்சை அருளப்பட்டு சிதானந்த யோகியுடன் சரஸ்வதி எனும் நாமத்தையும் ஸ்ரீலஸ்ரீ சரஸ்வதி யோகி தனது நாமத்தையும் சூட்டினார்.

மீண்டும் இமாலயத்தில் இருந்து யாழ்பாபாணம் வந்து ஆசன வகுப்புக்களை நிகழ்த்தினார். 1983 ஆம் அண்டு சொந்த இடம் கல்முனைக்கு வந்து ஆசிரிமம் ஒன்றை அமைத்து தான் காசியில் இருந்து கொண்டு வந்த லிங்கத்தையும் அம்மன் விக்கிரகத்தையும் வைத்து வணங்கிவந்தார்.

இங்கு யோகக்கலையில் ஆர்வம் குறைவாக மக்களுக்கு இருந்ததால் நான்கரை வருட்த்தின் பின்னர் 1988 ஆம் ஆண்டு நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் ஆசனங்களை கற்பிக்க கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கு ஆசனங்களை கற்பித்தார்.

தான் மறைந்தாலும் நோய்களை தீர்க்கும் இந்த யோகக்கலையால் மக்கள் பயன்பெற வேண்டும் என்று சுவாமியால் யோகக்கலை பயிற்றுவிக்க தெரிவு செய்யப்ட்ட சீடர்களாலும் இன்றும் முடிந்தவரை பணிகளை தொடருகின்றன.

தகவல் மூலம் – ஆரோக்கிய வாழ்வுக்கு அரு மருந்து இலகுவான யோக ஆசனம் நூல்