திருமலையில் கொரனாவினால் மரணித்தபெண்ணின் சடலம் பல தடங்களுக்குப்பின்னே எரிக்கப்பட்டது.

(பைஷல் இஸ்மாயில் –  கதிரவன்)

குறித்த பெண்ணின் சடலம் உரிய பாதுகாப்புக்களுடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.00 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து பொது மயானத்திற்கு எடுத்துவரப்பட்ட சடலத்தினை மயானத்திற்குள் கொண்டுவருவதற்கு மயான வாயில் கதவின் திறப்பு கொண்டுவர தாமதம் ஆனதால் சடலம் தகனம் செய்யப்படாமல் பல மணி நேரம் வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து மயானத்தில் தகனம் செய்பவருக்கு உரிய பாதுகாப்பு அங்கி இன்மையால் தனக்கு பாதுகாப்பு அங்கி தரப்படும்வரை சடலத்தை எரிப்பதற்கு முன்வரமாட்டேன் என குழப்பம் விழைவித்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கான அங்கி வழங்கப்பட்டதன் பின்னர்,  சடலம் தகனம் செய்யப்பட்டது.
இதற்கமைய 8.00 மணிக்கு வைத்தியசாலையில் இருந்து வாகனத்தில் ஏற்றப்பட்ட சடலம் சுமார் 2 மணி நேர தாமத்தத்தின் பின்னர் தகனம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் நேற்று திடீரென உயிரிழந்திருந்தார்.
பயாகலையைச் சேர்ந்த 51 வயதுடைய குறித்த பெண் நேற்று அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்கு இராணுவம் அறிவித்தது.
இதனையடுத்து  குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டன. அதற்கமைய பரிசோதனைகளின் முடிவில் அவர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.
இதன் பிரகாரம் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.