சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் அவல நிலைக்கு பதில் சொல்லப்போவது யார்?

பைஷல் இஸ்மாயில் –
கல்முனை மாநகர பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் விநியோகமானது முன்னறிவித்தல் இன்றி தொடர்ச்சியாக தடைப்பட்டுவருகின்றது. குறிப்பாக  கடந்து சென்ற ரமழான் மற்றும் புனித பெருநாள் தினத்தில் கூட இந்நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றது என்று தேசிய காங்கிரசின் பொதுத்தேர்தல் வேட்பாளர் றிஷாத் ஷரீஃப் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சாய்ந்தமருது நீர்த்தாங்கியில் ஏற்பட்டுள்ள பழுது ஒன்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நீர் நிரப்பப் படாமல் காணப்படுவதாகவும், இதனால் அயல் கிராமம் ஒன்றின் நீர்த்தாங்கியினூடாக தற்காலிக நீர் வினியோகம் இடம்பெறுவதாகவும் இதனாலேயே குறித்த பிரதேசத்துக்கான நீர் விநியோகம் தடைப்பட்டு வருவதாகவும் சுட்க்காட்டினார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னர் குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்கி நீர் வழங்கப்பட்டதாகவும், அப்போது இந்த பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லை என்றும், இப்போது விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நீர்த்தாங்கியில் தொடர்ந்தும் இவ்வாறு நீர் நிரப்பப்படாமல் இருக்குமாக இருந்தால், அந்த நீர்த்தாங்கியானது முற்றாக சேதமடைந்து பின்னர் நீர் நிரப்பவே முடியாத நிலைக்கு சென்று விடக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
அதிகரித்த சன நெரிசல் காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்தின் நிலக்கீழ் நீரானது சுனாமியின் பாதிப்பால் மாசுபட்ட நிலையில், இந்த நீர்த்தாங்கி அமையப்பெற்றதானது ஒரு வரப்பிரசாதமே, நமது பகுதியின் சனப் பரம்பலானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறானதொரு அரிய வளத்தை நாம் இழந்து நிற்பதானது துரதிர்ஷ்டமே. மக்களின் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு வானளாவு உயர்ந்து கம்பீரமாகக் காட்சி தரும் இந்த நீர்த்தாங்கியானது நமக்கு பிரயோஜனம் அற்று போய்விடுமோ என்ற கவலை ஏற்பாடுகின்றது.
இந்தப் பொடுகு போக்கு நிலைக்கு பதில் சொல்லப்போவது நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இதற்கான நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.