டாக்டர் ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்ய கொழும்பிலே இருந்து விசேட பிரசார செயலணி

0
74
த. தர்மேந்திரா
 

வரவுள்ள பொது தேர்தலில் மொட்டு கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வைத்திய கலாநிதி டிலக் ராஜபக்ஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் ஆசிர்வாதத்துடன் விசேட பிரசார செயலணி ஒன்று கொழும்பில் இருந்து இறக்கப்படுவதாக தெரிய வருகின்றது.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவின் நேரடியான வேண்டுகோளை ஏற்றே டாக்டர் டிலக் ராஜபக்ஸ வேட்பாளராக குதித்து உள்ளார் என்றும் இரு வாரங்களுக்கு முன் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு வந்த பாதுகாப்பு அமைச்சு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ஜனாதிபதியின் விசேட செய்தியுடன் இவரை சந்தித்து மந்திராலோசனை நடத்தினார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி டாக்டர் டிலக் ராஜபக்ஸ வியத்கம அமைப்பின் முக்கிய உறுப்பினராக உள்ள நிலையில் வியத்கம அமைப்பை சேர்ந்த பிரசார பீரங்கிகள், நாட்டை காக்கும் இளைஞர் படையணியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஆகியோர் இவரை ஆதரித்து நேரடியாக பிரசாரம் செய்ய உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்கின்ற ஒவ்வொருவரும் டாக்டர் டிலக் ராஜபக்ஸவுக்கு கட்டாயம் ஒரு விருப்பு வாக்கை தவறாமல் வழங்க வேண்டும் என்கிற வியூகத்தின் அடிப்படையில் இவர்களின் பிரசார உத்தி அமைந்து இருப்பதாக கூறப்படுகின்றது