முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு விவகாரம் நிந்தவூர் பிரதேச சபையில் கவலை, கண்டனத்தீர்மானம்

0
84

முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு விவகாரம்
நிந்தவூர் பிரதேச சபையில் கவலை, கண்டனத்தீர்மானம்
(ஏ.எல்.எம்.சலீம்)
இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கு நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் பெரும்கவலை வெளியிடப்பட்டதுடன் கண்டனத் தீர்மானம் ஒன்றும் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (வியாழன்) பிரதேசசபை சபா மண்டபத்தில் சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிப்பதாக கூறும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது தொடர்பான முக்கிய பிரேரணை ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.பாத்திமா றிஹானா முன்மொழிந்தார்.
அத்துடன் சபை ஆரம்பத்தில் தலைமை உறையாற்றிய பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வையும் குறித்த ஜனாஸா எரிப்பு விடயம் தொடர்பாகவும் பிரஸ்தாபித்து கவலையும் கண்டனமும் தெரிவித்தார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பாத்திமா றிஹானா முன்மொழிந்த ஜனாஸா எரிப்பு தொடர்பான கவலையும் கண்டனமும் தெரிவிக்கும் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இப்பிரேரணையை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட சுகாதாரப்பகுதி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைப்பதுடன் முஸ்லிம் ஜனாஸாக்களை இஸ்லாமிய முறைப்படி இனிமேல் நல்லடக்கம் செய்வதற்கு ஆவன செய்யுமாறு கோருவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பாத்திமா றிஹானா பிரேரணையை முன்மொழிந்து உறையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“உலக சுகாதார ஸ்தாபனம் கொரோனா வைரஸினால் மரணிப்போரை நல்லடக்கம் செய்யலாமென சுகாதார அறிவுரை வழங்கியும் இலங்கையில் குறிப்பாக முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது பெரும் மனவேதனைக்குறியதாகும்.
பல்வேறு கோரிகைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் முஸ்லிம்களின் மத உரிமை, மத விழுமியங்கள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடாகும்.
முஸ்லிம்களின் மனங்களை வெகுவாகப் புண்படுத்தியுள்ள இலங்கை அரசின் இந்த நடவடிக்கை மிகக் கவலைக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும். இறுதியாக இங்கு எரிக்கப்பட்ட முஸ்லிம் பெண் கொரோனா நோய் தொற்றினால் மரணமடையவில்லை என்ற தகவல் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாகவும் அமைந்துள்ளது வருந்தத்தக்கதாகும்.
எனவே மரணிப்போரை எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்வதுடன் முஸ்லிம் ஜனாஸாக்களை இனிமேல் நல்லடக்கம் செய்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்” என்றார்.
பதில் தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவருமான வை.எல்.சுலைமாலெவ்வை பிரேரணை மீது உரையாற்றுகையில், முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் துயர நிலமை மிக வண்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ரி.எம்.சப்ராஸ் பிரேரணை மீது உரையாற்றுகையில், முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிப்பு விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா (முஸ்லிம் காங்கிஸ் சார்பில்), அசாத் சாலி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் போன்றவர்கள் வழக்குத் தாக்குதல் செய்து இந்த ஜனாஸா எரிப்பு விடயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளது என்றார்.
குறித்த கண்டனத்தீர்மானத்திற்கான பிரேரணை மீது மேலும் சில சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன் கவலையும் கண்டனமும் தெரிவிக்கும் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.