கல்முனை மாநகர குப்பை வரி தொடர்பில் ஜுன் 1 இல் புதிய நடவடிக்கை ஆரம்பம்-மாநகர முதல்வர் .

0
72
பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பிரதேசத்தில்  அறவிடப்படும் திண்மக் கழிவு  ( குப்பைவரி)  வரியை எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் மறுசீரமைக்கவுள்ளதாக   மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு   வியாழக்கிழமை (21) முற்பகல்  மாநகர சபையின் பழைய சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற வேளை சபையில் பல உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டினார்.

சபை நடவடிக்கை ஆரம்பமான நிலையில் திண்மக்கழிவு வரி தொடர்பாகவும்  திண்மக்கழிவகற்றல் சேவைக்காக செலவிடப்படும் பெருந்தொகை நிதி தொடர்பிலும் மாநகர முதல்வரினால் நீண்ட ஒரு உரை இடம்பெற்றது.இதில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவகற்றல் சேவைக்காக பெருந்தொகை நிதி செலவிடப்பட்டு வருகின்றமை தொடர்பாகவும்  இதனை ஈடுசெய்வதற்காகவே சட்ட ஏற்பாடுகளுக்கமைய குடியிருப்பாளர்களிடம் திண்மக்கழிவகற்றல் சேவைக் கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்த அவர் கல்முனை மாநகர பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் அந்த சேவைக்கான நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அவற்றுக்கான செலவுகள் குறித்தும்  கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வரி தொடர்பில் விளக்கமளித்தார்.
அத்துடன்  கல்முனை பகுதியில் மத்ரஸா வீதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்மக்கழிவு சேகரிக்க சென்ற மாநகர சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்த சம்பவம் புரிந்துணர்வு இரு தரப்பில் இன்மையும் ஒரு காரணம் எனவும் இந்நிலையில்  குறித்த சம்பவ இடத்திற்கு சென்று ஆராய்ந்ததாக குறிப்பிட்டார்.எனவே இத்திண்ம கழிவு விடயத்தில் சகலரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கூறினார்.

கல்முனை பகுதியில் மத்ரஸா வீதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்மக்கழிவு சேகரிக்க சென்ற மாநகர சபை ஊழியர்களுக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்த சம்பவம் தொடர்பில்   மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சம்பவ தினத்தில் இரு தரப்பினருக்கும்  சுமூக நிலைமையை கல்முனை மாநர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எம்  பறக்கதுள்ளாஹ் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை தொடர்ந்து இன்றைய அமர்வில் கல்முனை பகுதியில் மத்ரஸா வீதி பகுதியில் இடம்பெற்ற திண்மக்கழிவு விடயம் தொடர்பாக எழுந்த பிரச்சினையை மையப்படுத்தி  கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் றோசன் அக்தர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்  கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை மாநகர சுகாதார பணிக்குழு தவிசாருமாகிய பஸீரா ரியாஸ்  எம்.எஸ் நிசார் (ஜேபி) ஆகியோர் தத்தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் ஏனைய   ஒவ்வொரு வட்டார உறுப்பினர்களும் தத்தமது வட்டாரங்களில் மாநகர சபையினால் சேகரிக்கப்படும் திண்மக்கழிவு வரி தொடர்பாகவும் மக்களுக்கு போதிய தெளிவின்மை தொடர்பாக பிரஸ்தாபித்தனர்.

மேற்படி உறுப்பினர்களின் வாதப்பிரதிவாதங்களை கருத்தில் கொண்ட மாநகர முதல்வர் நாட்டில் கொவிட் 19 தொற்று நோய் ஏற்பட்ட பின்பு குறிப்பாக மாநகர சபை பிரதேசத்தில் வாழும் மக்கள் பாரிய சிரமத்திற்கும்  கஷ்டத்துக்கும்  உள்ளாகியுள்ளனர் என எமது உறுப்பினர்கள் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாகவும் எனவே உறுப்பினர்களின்  வேண்டுகோளினை ஏற்று எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் மறுசீரமைக்கவுள்ளதாக   தெரிவித்தார்.