கல்முனை மாநகர சபையில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதற்கு நாளொன்றுக்கு 435000.00 ரூபா தேவை;சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே திண்மக் கழிவகற்றல் வரியை தீர்மானித்தோம்

ஊடக சந்திப்பில் முதல்வர் தெரிவிப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் செய்வதற்கு நாளொன்றுக்கு 435000.00 ரூபா தேவைப்படுகின்றது. இந்த நிதியை ஈடு செய்வதற்காகவே குடியிருப்பாளர்களிடமிருந்து ஒருவாரத்திற்கு 50.00 ரூபாவை அறவீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மாநகரசபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்பட்டது. என கல்முனை மாநகரசபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் முதல்வர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு  இன்று(17.05.2020) மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதல்வர் இந்த தகவல்களை வெளியிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, போன்ற பிரதேசங்களில் சுமார் 120000 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாளாந்தம் கல்முனை மாநகர சபைக்கு 30,000 பேர் அளவில் வந்து செல்கின்றனர். ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாளாந்தம் மாநகர சபையை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துகின்றார்கள்.
மாநகர சபை எல்லைக்குள் நாளொன்றுக்கு 120 தொண் திண்மக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. பல்வேறு வளப்பற்றாக்குறையோடு இயங்கிக் கொண்டிருக்கும் கல்முனை மாநகர சபை வாகன சாரதிகள் உட்பட சுகாதார பிரிவில் பணியாற்றுகின்ற 170 பேருக்குமான நாளாந்த கொடுப்பனவு, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள பள்ளக்காடு எனும் பகுதிக்கு கழிவுகளை எடுத்துச் செல்வதற்கான வாகன எரிபொருள் செலவுகள், எமது குப்பைகளை அங்கு கொட்டுவதற்கு வழங்கும் செலவு என மொத்தமாக ஒரு நாளைக்கு குப்பைகளை முகாமைத்துவம் செய்வதற்கு 435,000 ரூபா செலவு செய்யவேண்டி உள்ளது. இது மாதமொன்றுக்கு ஒரு கோடி 30 லட்சம் ரூபாவாகும்.

தற்போது நாளுக்குநாள் வர்த்தக நிறுவனங்களும் குடியிருப்பாளர்களுடைய அதிகரிப்பு காரணமாக கழிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் சாதாரண குடியிருப்பாளரிடமிருந்து வாரம் ஒன்றுக்கு 50.00 ரூபாவை அறவீடு செய்ய சபையினால் தீர்மாணிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சில உறுப்பினர்கள் தடையாக செயல்படுவது கவலை அளிக்கிறது. சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள் மற்றும் ஏழைகளிடத்தில் இதனை நாம் அறவீடு செய்வதில்லை. மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் வைத்தியசாலை, பிரதேச செயலகங்கள், வணக்கஸ்தலங்கள், திணைக்களங்கள் உட்பட அனைத்து அரச அலுவலகங்களிலும் இலவசமாகவே கழிவுகளை அகற்றி  வருகின்றோம். ஏனெனில் அவர்கள் மக்களுக்கான சேவையை செய்கின்றார்கள்.

 எனவே இவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாநகரசபையின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கழிவகற்றல் முகாமைத்துவம் என்பது ஏனைய சேவைகளைப் போல அல்ல ஒவ்வொரு நாளும் அகற்றப்படவேண்டும். மக்களின் நலனுக்காகவே மாநகரசபை தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. எனவே பொதுமக்களை பிழையாக வழிநடாத்தும் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும் இதன்போது தெரிவித்தார்.