பெருநாள் கொண்டாட்டங்களை தவிர்ப்போம்; மயோன் முஸ்தபா உருக்கமான வேண்டுகோள்!

(பீ.எம்.றியாத்)இம்முறை றமழான் பெருநாள் கொண்டாட்டங்களை முஸ்லிம்கள் தவிர்த்துக் கொள்வதன் மூலம் கொரோனா கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
முழு உலகையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு இன்னல்களை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம். பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன. ஐங்கால இமாம் ஜமாஅத் தொழுகை இல்லை. நோன்பின் அழகிய சிறப்புகளை முழுமையாக இழந்திருக்கின்றோம். கூட்டான தராவீஹ் தொழுகை, கியாமுல் லைல் தொழுகைகள் இல்லை.
அத்துடன் மக்கள் தொழில் இன்றி கஷ்டப்படுகின்றனர். வறுமை பீடிக்கிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலர் உல்லாசமாகவும் பெருநாள் உடுப்பு எடுத்துக் கொண்டும் பஸார்களில் பெண்களும் ஆண்களும் சேர்ந்து கடை கடையாய் ஏறி இறங்குவதானது நமது சமூகத்தின் மீது பழிபோடும் குறுகிய எண்ணம் கொண்டுள்ளோருக்கு மேலும் தீனி போடுவதாகவே அமையும்.
நாம் பல்லின சமூகத்தின் மத்தியில் வாழ்கிறோம், கடந்த சித்திரை புத்தாண்டை எமது சகோதர சமூகங்கள் கொண்டாடவில்லை. அவர்கள் புத்தாடை வாங்குவதற்காக அங்கும் இங்கும் அலையாமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். அது போன்றே வெசாக் பண்டிகையும் கொண்டாடப்படவில்லை. இதன் ஊடாக அவர்கள் கொரோனா எனும் கொடிய நோய் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
ஆனால் எம்மில் பலர் யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பது குறித்தது கவலை அடைகிறேன். மாற்று சமூகத்தவரும் மனிதர்கள்தான், அவர்களது உணர்வுகளையும் மதிக்க கடமைப்பட்டுள்ளோம். நம்மை பார்த்து இன்னும் இன்னும் ஆத்திரப்படும் சமூகமாக பெரும்பான்மை மக்களை ஆக்கிக்கொள்ள வேண்டாம் என இந்த சந்தர்ப்பத்தில் வினயமாக வேண்டுகிறேன்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் முற்றுமுழுதான இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கே இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் சமூகமாகிய நாம் ஒரு முன்மாதிரியான சமூகமாய் இருக்க வேண்டாமா. மாற்று சமூகத்தினர் நம் மீது கொண்டிருக்கின்ற வெறுப்புணர்வை இல்லாமலாக்க இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதற்காக எமது பெருநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, நாமும் முன்மாதிரியை வெளிக்காட்டுவோம் – என்று மயோன் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.