வியாபார நோக்கை மட்டும் முதன்மைப்படுத்தாது, சுகாதார ஆலோசனைகளை வழிநடத்தவேண்டும்

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள் கண்டிப்பு
(ஏ.எல்.எம்.சலீம்)
“கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற இக்கால கட்டத்தில் நோன்புப் பெருநாள் உடு, துணிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புடவைக்கடை வியாபாரிகள் வியாபார, இலாப நோக்கை முதன்மைப்படுத்தாது சுகாதார ஆலோசனைகளை தவறாது பின்பற்றுவதுடன், வருகை தருவோரையும் முறைப்படி வழிநடத்த வேண்டும்.”
இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். தஸ்லீமா பஷீர் கண்டிப்பான அறிவுறுத்தல் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேசத்தில் புடவை வியாபாரம் செய்யும் புடவைக் கடை உரிமையாளர்களுக்கென நடத்திய விசேட அறிவுறுத்தல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.
நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எம்.ஏ.எம். சித்தீக் தலைமையில் அலுவலக கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். தஸ்லீமா பஷீர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்
“உயிர் கொல்லி வைரஸான கொரோனா பரவலிலிருந்து மக்களைக்காப்பாற்றுவதற்காக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சுகுணன் தலைமையில் காத்திரமான நடவடிக்கைகளை இரவு பகலாக மேற்கொண்டு வருகின்றோம்.
எனினும், எமது பிராந்திய பொது மக்கள் இதில் பெரும் அசட்டையாகவுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளைத் தவறாது பொதுமக்கள் கடைப்பிடிப்பதன் மூலமே தொற்று பரவலிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
வைரஸ் தொற்று தொடர்பில் அறிகுறிகள், அடையாளங்கள் தெரியாதவர்களால் கூட தொற்று பரவும் அபாயமுள்ளதை உணர்ந்து பொதுமக்கள் செயற்பட வேண்டும்.
என்னை நான் பாதுகாக்க வேண்டும், மற்றவரையும் பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனையுடன் அரச சட்டங்களை, ஆலோசனைகளை மதித்து நாம் செயற்பட வேண்டும்.
இதேவேளை நோன்புப் பெருநாள் சில வாரங்களுக்குள் வரவிருப்பதால் தற்சமயம் இதற்கென உடுதுணிகளை வாங்குவதற்கென பொதுமக்கள் புடவைக்கடைகளில் பெரும் கூட்டமாகத்திரள்வதை அவதானிக்க முடிகின்றது.
இதுபெரும் அபாயகரமான நிலையாகும். கண்டிப்பாக இத்தகைய வைரஸ் பரவலுக்கான ஏது நிலையை புடவைக்கடை உரிமையாளர்கள் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்.
இந்த இடர் நிலையில் வியாபார மற்றும் இலாப நோக்கை புடவை வியாபாரிகள் முதன்மைப்படுத்தாது, சுகாதார ஆலோசனைகளை வியாபாரத்தின்போது கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதுடன், கடைகளுக்குவரும் நுகர்வோரையும், அதன் வழியே வழிநடத்தவும் வேண்டும்.
சட்டத்தை மதித்து, வைரஸ் பரவல் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றாது புடவைக்கடைகளில் வியாபார நடவடிக்கைகள் தொடர்வது அவதானிக்கப்பட்டால் குறித்த வியாபார நிலையங்களை மூடுவதற்கு கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக புடவைக்கடைகளுக்கு முன்னால் வாடிக்கையாளர்கள் கை கழுவுதவதற்கான ஏற்பாட்டுடன், பொது மக்கள் அங்கு சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்கச் செய்வதற்கு பொறுப்பான ஒருவரை நியமிக்கவும் வேண்டும்.
அத்துடன் புடவைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர், ஊழியர்கள் முகக்கவசம், கையுறைகளை அணிந்திருப்பதுடன், முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து வருபவர்களை மட்டும் கடைகளுக்குள் அனுமதிக்க வேண்டும்.
முக்கியமாக சமூக இடைவெளியைக் கட்டாயமாகப் பேணுவதுடன், ஆடைகளைக் கொள்வனவு செய்யவருவோர் எல்லோரையும், ஒரே நேரத்தில் கடைக்குள் அனுமதிக்காது சிறிய கடையாயின் ஒரே நேரத்தில் 5 நபர்களையும், பெரிய கடையாயின் 10 நபர்களையும் மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிக்க வேண்டும்.
இதே போன்ற மேலும் சில சுகாதார ஆலோசனைகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க சகல தரப்பினரும் முன்வரவேண்டும்” என்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்படி நிந்தவூர் பிரதேச புடவைக்கடை உரிமையாளர்கள், குறித்த சுகாதார வழிமுறைகளைத் தமது புடவைக்கடைகளிலும், வியாபார நடவடிக்கைகளின் போதும் கண்டிப்பாகப் பின்பற்றுவதாக கூட்டத்தில் உறுதியளித்தனர்.
தவிரவும், நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். தஸ்லீமா பஷீரின் தலைமையிலும் அர்ப்பணிப்பான வழிகாட்டலிலும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஓர் பெண் உத்தியோகத்தராக இருந்த போதிலும், இரவு, பகலாக அவரும் சுகாதாரப் பரிசோதர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இந்த விடயத்தில் ஆற்றிவரும் அளப்பரிய சேவைகளை நிந்தவூர்ப் பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் நன்றியும் தெரிவித்துள்ளனர்.