ஊரடங்கு நீக்கத்தால் இயல்பு நிலைக்குத் திரும்பியது கல்முனை மாநகரம்

(பி.எம்.எம்.ஏ.காதர்)
ஊரடங்குச்சட்டம் நாடு முழவதும் நேற்று(11-05-2020)காலை 5.00மணிக்குத் தளர்த்தப்பட்ட நிலையில் கல்முனை மாநகரப் பிரதேசத்தின் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியிருந்தது.இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் மற்றும் தனியார் வாகனங்களும் போக்குவரத்தில் ஈடுபட்டன அதிக போக்குவரத்து நெரிசலை காணமுடிந்தது.
அரச அலுவலகங்களும்,வங்கிகளும் தனியார் அலுவலகங்களும் திறக்கப்பட்ருந்தன அதே போன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன ஆடையகங்களில் சனநெரிசல் அலைமோதியதை அவதானிக்க முடிந்தது. அநேகமான இடங்களில் சமூக இடைவெளி பேணப்படாமல் கூடிநின்ற காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தியது.
சந்தைகள் திறக்கப்படாத நிலையில் வீதியோரங்களில் மரக்கறி விற்பனைகள் அதிகம் இடம்பெற்றன வீதியோரங்களிலேயே மீன்விற்பனையும் இடம்பெற்றது.நாளை நிலைமை எவ்வாறு இருக்குமோ என்ற அச்சத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதிலேயே மக்கள் ஆர்வமாக இருந்தார்கள் எல்லாப் பொருட்களின் விலைகளும் சற்று அதிமாகவே இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
இதே வேளை முஸ்லிம் மக்கள் நோன்புப் பெருநாளை எதிர்கொண்டுள்ளனர் இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இருந்த போதிலும் பெருநாளை வீட்டிலேயாவது கொண்டாடுவோம் என்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதைக் காணமுடிகின்றது.
பொது மக்கள் சமூக இடைவெளியை பேணுவதிலும்,முகக்கவசம் அணிவதிலும்,கைகள் கழுவுவதிலும் அசமந்தப் போக்கையே சடைப்பிடிக்கின்றனர். இதே வேளை சிலர் முகக்கவசங்களை கழுத்துக் கவசங்களாக அணிந்து கொண்டு திரிகின்றனர்.பலர் மோட்டார் சைக்கிள்களில் இருவராகவும் மூவராகவும் பயனிக்கின்றனர்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆங்காங்கே மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.