சுபீட்சமான நல்லுறவுக்கு தமிழ்பேசும் சமூகங்கள் ஒன்றுபட வேண்டும்.

 அ.அஸ்வர்.

தேசப்பற்றை அல்லது ஒரு தேசிய உணர்வை வெளிப்படுத்தும்போது அதற்கான முழுக் கெளரவத்தையும் வழங்கவேண்டிய மனநிலை என்பது ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் உணர்வு பூர்வமாக எழவேண்டிய ஓர்  அடிப்படைத் தன்மையாகும். 

வெறும் சம்பிரதாயங்களுக்கோ அல்லது அதிகாரத்திற்கோ இயைந்து மனதையும் உணர்வையும் வெவ்வேறு வகையான கோணங்களில் வைத்துக்கொண்டு சுமாராகச் செய்துவிட்டுப் போகிற சாதாரண தன்மையாகக் கொள்ள முடியாது.
நம்நாட்டின் தேசப்பற்றுச் சிந்தனை எனும் விடயம் ஆரம்பகாலத் தளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறுபட்ட வகையில் சென்றுகொண்டிருப்பதை நிறையவே அவதானிக்கக்கூடியதாயுள்ளது.  நாட்டின்  பெரும்பான்மை சிறுபான்மை என்கிற தரப்படுத்தல்களின் மூலம் இதுவரை எந்தவிதமான பிரதிபலன்களும் மக்கள் மத்தியில் ஏற்பட்டதாகக் காணோம்.
மூதாதையர்களிடமிருந்தும், மூத்த உறவுகளிடமிருந்தும், சமய சித்தாந்தங்களிலிருந்தும் பண்பாட்டையும்,  மனித நிகரீகத்தையும், நல்ல வழிமுறைகளையும் ஆண்டனுபவித்துப் பழகிவரும் மக்களுக்கு பெரும்பான்மை என்ற அந்தஸ்து எதைக் கற்றுக் கொடுத்துள்ளது என வினாவெழுப்பி நிற்கிறது.   நல்ல பழக்கவழக்கங்களையும், ஒருமைப்பாட்டையும் கற்றுப் பயன்பெறும் வகையில் நம்நாட்டு பெரும்பான்மை இனத்தின் எந்த நடவடிக்கைகளும் கிலாகித்து பேசுமளவிற்கு வியாபித்துவிடவில்லை என்பது திண்ணமாகத் தெரிகிறது.
சிறுபான்மை சமூகங்கள் இந்நாட்டின் சகோதர பிரஜைகள் என்று ஏற்றுக் கொள்வதற்கான எந்த சமிக்ஞைகளையும் பெரும்பான்மை சமுகம் காட்ட முற்படவுமில்லை அது தொடர்பான ஆயத்தங்களைச் செய்வதற்கு முயலவுமில்லை என்பதை நிறையக் கண்டு வந்திருக்கின்றோம்.  தொன்மைதொட்டு சிறுபான்மை சமூகங்கள் தம் தாய்நாடிற்காகச் செய்துவந்த தியாகங்களையும்,  சேவைகளையும் கடுகளவிலும் கணக்கெடுக்காததாகவே அவர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.
சிறுபான்மை சமூகங்களை இதுவரைக்கும் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்கிலேயே கருதி வருகிற பெரும்பான்மை சமூகம்,  இச் சமூகங்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக நிறைய வெறுப்புணர்வுகளையே விதைத்து வருகின்ற நிலையையே காண்கின்றோம்.
பெரும்பான்மை இனத்திடமிருந்து நல்லெண்ணங்களைக் கற்றுக் கொள்வதற்கான சூழல் இனி சிறப்பான வடிவத்தில் வளர்சியடையும் என்று இன்னும் எவ்வளவு காலத்திற்கு காத்திருக்கப் போகிறோம்?  அதற்கான சைக்கினைகளைக் காட்டுவதற்கு புதியதொரு சமுதாயம் உருவாகும்வரை நம்மால் காத்திருக்க முடியுமா?
பெரும்பான்மையினருடனான எல்லா சூழ்நிலைகளிலும் வாழப் பழகியுள்ள சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள்ளிருக்கிற தமிழுணர்வு என்கின்ற உயருணர்வு மூலம் தமிழ்,முஸ்லிம் என்ற இன அடையாளங்களை பிரித்தாளும் வழிமுறையாகக் கொள்ளாமல் நிரந்தரமான தமிழ்பேசும் சமூகம் எனும் பெருங்குணத்தோடு ஒரு நேர்கோட்டில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
ஒவ்வொரு இனத்துக்குமான சமூக அடையாளங்களும், சமய நெறிமுறைகளும் வேறுபட்ட சுபாவங்களாகக் கொண்டிருப்பதில் எந்தவொரு ஏற்றத்தாழ்வையும் நாம் ஏற்படுத்திவிட முடியாது.   நமக்குள்ளிருக்கின்ற மொழி எனும் மகோன்னத ஊடகம் மிக விசாலமான உணர்வை நமக்குள் தக்கவைத்திருக்கிறது என்பதை பெருமையாகக் கொள்ளலாம்.
சங்ககாலத்திலிருந்து இற்றைவரை தொடர்ந்துவரும் மொழியுடனான தமிழுணர்வு நீண்டு நிலைக்கத்தக்க அடையாளங்களாகப் பதித்துள்ள வரலாற்றை தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இலகுவில் மறந்துவிட முடியாது.   இலக்கியம் என்றும் பண்பாடு, கலாசரம் என்றும் பின்னிப் பிணைந்திருந்த தமிழ் முஸ்லிம் சமூக உணர்வுகளுக்குள் பெரும்பான்மை சமூகத்தின் விதவிதமான தலையீடுகள் ஏற்படுத்திய காயங்களும் வலிகளும் சில கசப்புணர்வுகளை பொறித்து வைத்திருப்பதை எவரும் மறுக்கவியலாது.
இந்த வேதனையான அனுபவங்கள் போதாதென்று பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் களம்புகுந்த நம்மவர்களது அரசியல் அபிலாஷைகளும் குட்டையைக் குழப்பும் கைங்கரியங்களில் ஈடுபடத் தொடங்கின.   இந்தக் குழப்பங்களும்
தந்திரங்களும் இவ்விரு சமூகங்களுக்குள்ளும் எந்தவிதமான சமூக மாற்றங்களையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை உருவாக்கித் தந்திருக்கிறது.
மனக்கிலேசங்களூடாக மாறுபட்ட விதண்டாவாதங்களுடனிருக்கும் இவ்விரு சமூகங்களும் தமக்குள்ளிருக்கின்ற கசந்த அனுபவங்களிலிருந்து வெளியாகி வரவேண்டும்.   இடைப்பட்ட காலத்தில் எமக்குள் ஏற்பட்ட கசப்புணர்வுகள் ஆற்ற முடியாத புண்ணாக சுரண்டப்படாமல் பாதூகாக்கப்பட வேண்டியுள்ளது.   காயப்பட்ட அனுபவங்களை தொடர்ச்சியாக பாடமாக்கிக் கொண்டே செல்வது தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே ஓர் ஆரோக்கியமான எதிர்காலத்தை தோற்றுவிக்காது என்பதை இன்றைய இளைஞர் சமூகம் கூர்ந்து கவனங்கொள்ள வேண்டும்.
காலமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ள தப்பான நடத்தைகள் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுவதால் எந்த பிரதிபலனும் ஏற்படப்போவதில்லை என்ற  நோக்குகைக்கு உட்படுத்தப்பட்டு, இன்றிருக்கின்ற சமூக ஊடகங்களும் சமய, கலாசார வழிமுறைகளும் ஆகுமான காரியங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக களத்திலிறங்க முற்பட வேண்டும்.
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் மீளுறவு என்பது நிரந்தரமான, உடைத்தெறிய முடியாத பாறை வேலிகளாலானதல்ல, மிக இலகுவான முறையில் மனம்விட்டுப் பேசுவதன் மூலமாகவும்,  ஜனநாயக ஊடக வெளிப்படுத்தல்கள் மூலமாகவும் பந்தியிலமர்ந்து சாவகாசமாய் கருத்தாடக்கூடியதே.
வேண்டாவெறுப்புகளும் விதண்டாவாதங்களும் விதைத்து விட்டுப்போன நச்சுக் களைகளை மிக நிதானமாக கையாண்டு இல்லாதொழிப்பதற்கான ஆற்றுப்படுத்தல்களை இரு சமூகங்களும் தொடர்ந்து முன்னெடுக்க ஒரு நேர்கோட்டில் பயணிக்கவேண்டியுள்ளது.  இதுகாலவரை இவ்விரு சமூகங்களிடையேயும் இருந்துவந்த புரிந்துணர்வற்ற தன்மைகளை தூக்கியெறிந்துவிட்டு, சபீட்சத்துக்கான இறக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.  இந்த வழிமுறைகளைக் கையாள்வதற்கு நேர்மையான ஊடகப் பண்பாடு ஒரு நல்ல சகுனமாகத் தென்படுவதான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டியமைக்கும் பணிகளுக்கு பிரமாண்டமான தந்திரோபாயங்களும், தொழில்நுட்பங்களும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்பதால் நமக்குள்ளிருக்கும் பேனாமுனைகளையும், எழுத்து வான்மைகளையும் சிறந்த ஆயுதமாகவும் நெம்புகோலாகவும் கொள்ளலாம். இனிமேலும் முரண்டு பிடித்துக்கொண்டு வெறுப்புணர்வுகளோடு முத்தை திருப்பிக் கொள்கின்ற, வலிந்து உளப்படுத்திக்கொண்ட வேற்றுப் போக்குகளுக்கு முடிவு கட்டுவதற்கு மீண்டும்  இலக்கியங்களையும் ஊடகங்களையும் கையாள வேண்டிய கடப்பாட்டை உணர்வுபூர்வமாக கையாண்டால் நமக்காக இல்லாவிட்டாலும் இன்னொரு வழித்தோன்றலுக்கான படிமுறையாக இருக்கும் என்பது சுபீட்சமான நம்பிக்கையாகத் தெரிகிறது.
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் நேர்கோட்டுப் பயணம் சக்திகளுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் சகிக்க முடியாத துன்புறுத்தலாக அமைந்தாலும் அவர்களின் நீண்டகால சுயநல நிகழ்ச்சி நிரல்களை எரிக்கும் வல்லமை கொண்ட சக்தியாக பரிணமித்துக் காட்டும் என நம்பலாம்.