கொழும்பிலிருந்து வந்து மட்டக்களப்பில் தேடுதல் நடாத்திய குற்றப்புலனாய்வுப்பிரிவினர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு பாலமுனை பிரதேசத்திலுள்ள வாடகை விடுதி ஒன்று இன்று 08 வெள்ளிக்கிழமை பொலிஸ் விஷேட அதிரடிப்படை பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
குற்றப் புலனாய்வுத்துறை – சி.ஐ.டி. பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கொழும்பில் இருந்து நேற்று 07 வியாழக்கிழமை வருகைதந்த குற்றப் புலனாய்வுத்துறை பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்ட மேற்படி விடுதி பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் முழுமையாக சோதனையிடப்பட்டது.
அத்தோடு கொழும்பிலிருந்து வருகைதந்த குற்றப் புலனாய்வுத்துறை – சி.ஐ.டி. பிரிவு அதிகாரிகளால் குறித்த விடுதியின் உரிமையாளருடன் நடாத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில்,விடுதி உரிமையாளரின் அனுமதியுடன் குறித்த விடுதிக் கட்டிடம்,காணி என்பன முழுமையாக சோதனையிடப்பட்டது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்படட்தாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டு,சோதனையிடப்பட்டது.
கடற்கரைக்கு அருகாமையில் காணப்படும் குறித்த விடுதி சோதனையிடப்பட்ட போது குற்றப் புலனாய்வுத்துறை – சி.ஐ.டி. பிரிவு, பொலிஸ் விஷேட அதிரடிப்படை,இராணுவம்,புலனாய்வு பிரிவினர்கள் என பலரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.