பாடசாலைகள் ஆரம்பிப்பதில் எந்த உறுதியும் இல்லை.திட்டமிட்டபடி உயர்தரபரீட்சைகள் நடைபெறும். திருமலையில்கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர

(கதிரவன்)
பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்த உறுதியும் இல்லை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இதுபற்றி முடிவு செய்யப்படும் இவ்வாறு  கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர நேற்று  ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மாகாண கல்விப் பணிப்பாளர்களடன் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்தானந்தா தலைமையிலான குழுவினர்  நேற்று திருமலைக்கு  விஜயம் செய்தனர்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உடனான கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
பாடசாலைகளில் நிலவுகின்ற பல்வேறு விதமான குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.அநேகமான பாடசாலைகளில் நீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியிருக்கின்றது. மாணவர்களுக்கான இடவசதி பற்றாக்குறையாக இருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது  என்பன போன்ற காரணங்கள் வலயக்கல்வி பணிப்பாளர் களினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு முன்வைக்கப்பட்டது.
இங்கு பதிலளித்த கல்வி அமைச்சின் செயலாளர் தான் ஒன்பது மாகாணங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள மாகாண கல்விப் பணிப்பாளர்கள் வலயக்கல்விப் பணிப்பாளர் களோடு கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற்று ஜனாதிபதி விசேட செயலணி குழுவினருக்கு இந்த முன்மொழிவுகளை சமர்பிக்க உள்ளேன்.சுகாதார அமைச்சு ஜனாதிபதி செயலணி என்பனவற்றின் ஆலோசனைக்கு அமையவே பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான உத்தேச தேதி தீர்மானிக்கப்படும் என அங்கு குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கல்வி ராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர பாடசாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக இந்த விஜயம் அமைந்திருந்தது. புதிய தேதி நிர்ணயம் பற்றி தீர்க்கமான முடிவு இல்லை. ஆனால், சமூக வலைத்தளங்கள் ஒவ்வொருவிதமான திகதிகளில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என செய்திகளை பரப்பி வருகின்றார்கள். இதனை நாங்கள் முற்றாக மறுக்கின்றோம். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சரியான தகவல்களை ஊடகங்கள் வழங்க வேண்டும். அவர்களை குழப்புவதாக இவர்களது செயல்பாடுகள் இருக்கக்கூடாது. இவ்வருடம் திட்டமிட்டபடி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களஆணையாளர் உறுதியாக இருக்கின்றார். மாணவர்கள் அச்சமின்றி பரீட்சைக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். பரீட்சைகள் நடைபெறுமா என்ற அச்சம் மாணவர்கள் மத்தியிலும் ஆசியர்கள் மத்தியிலும் நிலவுகின்றது.
மாணவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை திட்டமிட்டபடி பரீட்சைகள் இடம்பெறும்.ஆகவே மாணவர்கள் இதுவரை பாடசாலைகளில் தங்களுக்கு கற்பித்த அலகுகளில் கூடுதல் கவனம் எடுத்து பரீட்சைக்கு தங்களை தயார்படுத்தி நல்ல பெறுபவர்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.