மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் நடவடிக்கையில் வசந்தம் தொலைக்காட்சியில் பாட போதனை ஏற்பாடு

கொரோனா தொற்று அபாயம் காரணமாக அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை தொலைக்காட்சி மூலமாக மேற்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைவாக மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டிற்கமைவாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரக்குமாரின் மேற்பார்வையில் தேற்சிபெற்ற ஆசிரியர்களினால் மட்டக்களப்பில் தயாரிக்கப்பட்ட கற்பித்தல் நடவடிக்கை வீடியோ படங்களாக வசந்தம் தொலைக்காட்சியில் “வித்தியா வசந்தம்” நிகழ்ச்சியூடாக இன்று முதல் (11)ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
தரம் 6 தொடக்கம் 09 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்காக கற்பிக்கப்பட்ட இப்பாடவிதான நிகழ்ச்சிகள் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10 மணி தொடக்கம் 10.30 மணி வரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக மாணவர்கள் இக்கற்பித்தல் நிகழ்ச்சியினை தொலைக்காட்சி வாயிலாக கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை வலயத்திற்குற்பட்ட பாடசாலை அதிபர்கள் ஊடாக மேற்கொள்வதுடன் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பில் தயாரிக்கப்பட்ட இந்த கல்வி ஒளிபரப்பினை மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுமாறும் இதற்கு பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஊக்குவிக்குமாறும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுக்கின்றார். இக்கல்வி ஒளிபரப்பில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
11.05.2020

 

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு